லிட்டில் இந்தியா மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும்,செல்லுபடியாகும் உரிமம் இன்றியும் மதுபானம் விநியோகித்ததாக 15 சில்லறை விற்பனைக் கடைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அக்கட்டுப்பாட்டு மண்டலத்தின் பல்வேறு இடங்களில் அக்டோபர் 25ஆம் தேதிக்கும் நவம்பர் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து இவ்விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற கடைகள் இக்கட்டுப்பாட்டு மண்டலத்தில் வார நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே மதுபானம் விநியோகிக்க அனுமதிக்கப்படுகின்றன. பொது விடுமுறை நாள்களிலும் அதற்கு முந்தைய நாளிலும் இந்த விற்பனை நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை எனக் குறைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உண்டு.
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 15 கடைகளில், 13 கடைகள் அனுமதிக்கப்பட்ட விற்பனை நேரத்துக்குப் பிறகு மதுபானம் விநியோகித்ததும் இரண்டு கடைகள் செல்லுபடியாகும் உரிமம் இன்றி மதுபானம் விநியோகித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை நேர விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளையில், செல்லுபடியாகும் உரிமம் இன்றி மதுபானம் விநியோகிப்பவர்களுக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படும். இக்குற்றத்தை மீண்டும் செய்பவர்களுக்கு $20,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
