'சக்கரங்களை சட்டவிரோதமாக மாற்றுவது ஆபத்துகளை விலைக்கு வாங்குவதாகும்'

'சக்கரங்களை சட்டவிரோதமாக மாற்றுவது ஆபத்துகளை விலைக்கு வாங்குவதாகும்'

2 mins read
17f90cd5-9814-4481-b58e-a1043b022265
ஸ்டார் விஸ்தா அருகே காணப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளில் சக்கரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோட்டார்சைக்கிள்களில் வேறுவித டயர்களைப் பொருத்தவது, பின் சக்கரத்தை வண்டியுடன் இணைக்கும் பட்டையை நீட்டி வைத்துக்கொள்வது போன்ற மாற்றங்கள் அழகாக இருக்கலாம்.

இப்படி மாற்றுவதால் வண்டி வேகமாகச் செல்லும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இத்தகைய மாற்றங்கள் சட்டவிரோதமானவை, ஆபத்தானவை. அவற்றின் காரணமாக வண்டி வேகமாகச் செல்லுமா என்பது இதுவரை மெய்ப்பிக்கப்படாத ஒன்று என்று சாலை பாதுகாப்பு, பந்தயத் துறை வல்லுநர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

'எஸ்பிஆர் டிராக்டேஸ்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஜோசஃப் லீ, இத்தகைய மாற்றங்கள் ஆபத்தானவை என்றார். "தாய்லாந்து பாணி பந்தயத்தை மலேசியா தொடங்கியது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பாணி தலை எடுத்துள்ளது.

"பலரும் உறுதி இல்லாத அலுமினியப் பட்டைகளைப் பொருத்துகிறார்கள்.

"கனமான ஒருவர் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும்போது அந்தப் பட்டை உடைந்துவிடும் ஆபத்து உண்டு," என்று அவர் எச்சரித்தார்.

அதேபோல், எந்தத் தரநிலையிலும் சேராத ஒல்லியான டயர்களை மாட்டி ஓட்டினால் ஈரமாக இருக்கும் சாலைகளில் செல்லும்போது எளிதில் வழுக்கிவிடும் என்று 'சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர்' என்ற நிலையத்தின் உதவி நிர்வாகி அமான் அல்ஜுனிட் குறிப்பிட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த 'ரேஸ்ஒர்க்ஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ்' என்ற மோட்டார்சைக்கிள் பட்டறை உரிமையாளர் நோர்மன் லீ, இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்று மோட்டார்சைக்கிள்காரர்களுக்குப் பட்டறைகள் ஆலோசனை கூறவேண்டும் என்றார்.

மேடு, பள்ளங்களில் குதித்து போகும்போது ஆபத்து காத்திருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

ஜோகூர் பாருவில் செயல்படும் பட்டறைகளில் இத்தகைய பட்டைகளை எளிதில் பொருத்திவிடலாம்.

சிங்கப்பூரிலும் சில பட்டறைகளை இந்த வேலைகளைச் செய்கின்றன என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.