போதையற்ற சிங்கப்பூரை உருவாக்கும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ இடைநிலை இல்லம் பச்சை விளக்கொளியில் மிளிர்ந்தது.
போதைப்பொருள் தீங்குகளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்வதுடன், போதையில்லாத சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் வண்ணம் ஜூன் 26ஆம் தேதி ‘போதையற்ற சிங்கப்பூர்’ நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன் தொடர்பில், இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ கட்டடத்தில் ஒளியூட்டு நடைபெற்றது. போதைப்பொருள் எதிர்ப்புப் பட்டையின் நிறங்களான பச்சை, வெள்ளையில் அக்கட்டடம் ஒளியூட்டப்பட்டது. போதைக்கு அடிமையாகி, பின்னர் அதிலிருந்து மீண்ட அனுபவத்தையும் போதைப்பழக்கம் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்தும் பேசினார் கோபால் மாஹே.
அதனைத் தொடர்ந்து இல்லவாசிகளும் ‘ஆஷ்ரம்’ ஊழியர்களும் அக்கட்டடத்தின் அருகில், கைகளில் பச்சை விளக்குகளை ஏந்தியபடி நடைப்பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஆஷ்ரம் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
போதைப்பழக்கத்திலிருந்து மீண்டுவரும் ஏறத்தாழ 20 பேர் தண்டனைக் காலம் முடிவடையும் தறுவாயில் சில மாதங்களை ‘ஆஷ்ரம்’ இல்லத்தில் கழித்து வருகின்றனர்.
அவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், “போதையிலிருந்து மீண்டுவந்து சமூகத்தில் மறுவாழ்வு மேற்கொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சிறப்பானது. ஒவ்வொரு நாளிலும் ஏற்படும் முன்னேற்றத்தை வெற்றியாகக் கருதவேண்டும்,” என்றார் ஆஷ்ரம் நிர்வாகக் குழுவின் நிதி மேலாளர் ஆதித்யா ரமணி.
மேலும் இந்நாளையொட்டி, தீவெங்கிலும் உள்ள பல்வேறு அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் பச்சை, வெள்ளை விளக்குகளுடன் ஒளிர்ந்தன. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தகைய ஒளியூட்டு, போதைப்பொருளுக்கு எதிரான சமூகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

