அண்மையில் லிட்டில் இந்தியா சென்ற நான் அங்கிருந்து அங் மோ கியோவில் உள்ள என் தாயரைச் சந்திக்க பேருந்தில் பயணம் செய்தேன். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி ரயிலில் ஏறி, நொவீனாவில் இறங்கி மறுபடியும் பேருந்து ஒன்றைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். இப்படி பேருந்து, ரயில் என மாறி மாறி மூன்று பயணம் மேற்கொண்ட நான் பயண அட்டை மூலம் செலுத்திய கட்டணம் ஒரு வெள்ளிக்கு சற்று கூடுதல்தான். எனக்கு வியப்பு. பரவாயில்லையே, வசதியாக, ஆற அமர பயணம் செய்து இவ்வளளவு தூரம் சென்றதற்கு செலுத்திய கட்டணம் இந்த அளவுதானே என எண்ணி மகிழ்ந்தேன். ஆனால், சிங்கப்பூரில் ஓரிடம் விட்டு இன்னொரு இடம் செல்வது இவ்வளவு எளிதாக முன்காலத்தில் இருந்ததில்லை. இப்படியாகத்தான் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நாலரை வயது பாலகனாய் எனது தந்தை, தாயாருடன் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தேன். மெக்பர்சன், ஜூசியட் போன்ற இடங்களில் தங்கி அருகில் உள்ள செராயா (Seraya) தொடக்கப் பள்ளிக்கு தனியாக செல்லப் பழகிக்கொண்டேன். பின்னர், 4ஆம் வகுப்பில் பயிலும்போது தெலுக் குராவ் ‘லோரோங் ஜெ’யில் தங்கியபோதும் பள்ளிக்குத் தனியாகவே பேருந்து எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. வீட்டில் சின்னஞ்சிறு தம்பிமார் இருவர் இருக்க, தாயாரால் கூட வரமுடியாது. வங்கியில் வேலை பார்த்து வந்த தந்தையோ காலையில் கிளம்பினால் இரவு எட்டு மணிபோல்தான் வீடு திரும்புவார்.
“உன் அப்பாவுக்கு பேங்கையே தன் தலையில் கட்டிக்கொண்டு ஆள்வதாக நினைப்பு,” என்று தாயார் கேலியும் கிண்டலுமாகக் கூறுவார். தங்கியிருந்த இடத்திலிருந்து தெலுக் குராவ் சாலைக்கு வருவதற்கே கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பிடிக்கும். இப்பொழுதுபோல் அன்று நேரத்திற்கு பேருந்து வருவது எனபதெல்லாம் நடக்காத காரியம். வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறி பள்ளி சென்று சேர்வதற்கு எப்படியும் 45 அல்லது 50 நிமிடங்களாவது ஆகும். பிறகு, தொடக்கநிலை 6ஆம் வகுப்பு பயிலும்போது எனது தம்பி ஒருவனையும் கூடவே பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அது அவ்வளவு எளிதல்ல.
தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதுதான் நிலைமை இப்படி என்றால், விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது இன்னும் கடினம். தமிழ்ப் பாடம் பயில, சிராங்கூன் சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜஸ் சாலை தமிழ்ப் பள்ளிக்கு காலை 7.30மணிக்கு இருக்க வேண்டும். அதற்காக, அப்பொழுது தங்கியிருந்த காலாங் எஸ்டேட்டிலிருந்து மூன்று முறை பேருந்து எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து வீடு வந்து மதியம் விக்டோரிய உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அன்றிருந்த போக்குவரத்து நிலைக்கும் இன்றைய நிலையையும் நினைத்துப் பார்த்தால் இதுவா அன்று நாம் பார்த்து வளர்ந்த சிங்கப்பூர் என்று தோன்றும்.
சிங்கப்பூர் போக்குவரத்தை சீர்படுத்த பேருந்துக் கட்டமைப்பு போதுமா, இல்லை ரயில் கட்டமைப்பு சரிவருமா என்று தீர்மானிக்க உலகத்தரம் வாய்ந்த இரு பெரும் நிறுவனங்களை அழைத்து ஒரு விவாதத்தில் பங்கேற்கச் செய்தார் அமரர் லீ குவான் யூ. இரு நிறுவனங்களுமே, ஒன்று பேருந்துக் கட்டமைப்புப் போதும் என்றும் மற்றது ரயில் கட்டமைப்புதான் உகந்தது என்று கூற, திரு லீ தமக்கே உரிய தீர்க்கதரிசனத்துடன் இரண்டும் கலந்த ஒன்றே சிங்கப்பூருக்கு சிறப்பாக அமையும் என்று முடிவெடுத்தார். இதுபோல், ஒன்றைப் பெறுவதற்காக மற்றொன்றை விடுவதுபோல் செயல்பட்டு பின்னர் இரண்டையும் பெற்றுவிடும் பாங்கு வெகு சிலருக்கே வரும்.
திரு லீயின் அந்த முடிவால் இன்று கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வடகிழக்கு, டௌன்டவுன், வட்டப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் போன்றவற்றுடன் கிழக்கிலிருந்து மேற்குவரை குறுக்கு ரயில் பாதை, ஆங்காங்கே இலகு ரயில் பாதை என ரயில் கட்டமைப்பு கிட்டத்தட்ட தீவு முழுவதும் அமைந்துள்ளது. அதேபோல் பேருந்து என எடுத்துக்கொண்டால் சீரமைக்கப்பட்ட பேருந்துப் போக்குவரத்து முறைப்படி இன்று மூலை முடுக்கு எனப் பாராமல் எல்லா இடத்திற்கும் செல்லக்கூடிய பேருந்து வசதி உள்ளது. நேரம் ஒரு பொருட்டல்ல என்றால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க பேருந்து ஏறி நிதானமாகப் பயணம் செய்யும் வசதி இப்பொழுது உள்ளது. உலகின் எத்தனை நாடுகளில், நகரங்களில் இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு உள்ளது என்பது கேள்விக்குறியே.
போக்குவரத்தில் மட்டும்தான் சிங்கப்பூர் இவ்வளவு கவனம் என்றில்லை. கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு, சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் வெகுமதி என்பது எப்பொழுதும் உண்டு. 2008ஆம் ஆண்டில் பத்து மாதம் கேலாங் ஈஸ்டில் என் குடும்பம் வாடகை வீட்டில் தங்கிருந்தபோது ஏற்பட்ட அனுபவம் என்னால் என்றும் மறக்க முடியாதது.
எனது இளைய மகன் அந்த ஆண்டு பள்ளிக் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்கு பரிசாக அன்றைய மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மத்தையாஸ் யாவ் தன்கீழ் உள்ள சமூக மன்றம் வாயிலாக ஒரு சிறு தொகையை எனது மகன் பெயருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த எனக்கு மகிழ்ச்சி ஒருபுறம், மறுபுறம் வியப்பு. நாங்கள் புதிதாக அங்கு தங்கத் தொடங்கி ஒராண்டுகூட ஆகாத நிலையில் இப்படியா என்று. கல்விக்கு முதலிடம் தரவேண்டும், மாணவர்களை போற்ற வேண்டும் என்பது நடைமுறையாகவே உள்ளது என்பதை எண்ணி இன்றும் சிங்கப்பூரை எண்ணி எனக்குப் பெருமிதமே ஏற்படுகிறது. நன்கு படிக்கும் மாணவர் எவரும் கல்வி கற்க, நிதியுதவி பெற எந்தப் பிரச்சினையும் இல்லை. இனம், மொழி, சாதி, என எந்தப் பாகுபாடும் இல்லை, சிபாரிசும் தேவையில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல்தான், இளையர் தங்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளவும் வழியுண்டு. சிங்கப்பூர் இளையர்கள் கட்டாயமாக ஆற்ற வேண்டிய தேசிய ராணுவச் சேவை வழி பலர் மேன்மையடைந்துள்ளனர். வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளாக, மனம்போன போக்கில் திரிந்தோர் தேசிய சேவைக்குப் பின் பயனுள்ள வழிகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதை பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞர் தேசிய சேவையின்போது வாகனப் பராமரிப்பு துறை அதிகாரியாக இருந்தார் (Motor Transport Officer). அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அவர் இன்று தனது மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தை தானே பழுதுபார்த்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளார். மேலும் பலர் பாதுகாவலர்களை பணியமர்த்தும் பாதுகாப்பு நிறுவனங்களை நடத்துகின்றனர்.
முன்னொரு காலத்தில் ‘பிரில்கிரீம்’ என்ற ஆடவர் தலைமுடியை அலங்கரிக்கும் பொருள் விளம்பரத்தில் ‘பக்காய்லா பிரில்கீரிம்’ என்று மலாய் மொழியில் ஆடவர் ஒருவர் கூறுவார். அந்த விளம்பரம் தொலைக்காட்சியில் இடம்பெறும். அதற்குப் போட்டியாக, ‘வேசலின் (Vaseline)‘, யார்ட்லி (Yardley)‘, ‘ஓல்ட் ஸ்பைஸ் (Old Spice)‘, (வைட்டலிஸ் (vitalis)‘, என பல தலைமுடி அலங்காரப் பொருள்கள் வந்து மறைந்தன. ஆனால், இன்றும் முன்பிருந்த விளம்பரம்கூட இல்லாமல் ‘பிரில்கிரீம்’ சத்தமில்லாமல் கடைகளில் விற்பனையாகின்றன. அதற்குள்ள மதிப்பே தனி. அதுபோல்தான் சிங்கப்பூரும், என்றும் ஆடம்பரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறுபது ஆண்டுகள் என்ன காலங்காலமாக சிறந்து விளங்கும்.