குறுநாடகத் தயாரிப்புக்கு ‘ஐஎம்டிஏ’ ஆதரவு

குறுநாடகத் தயாரிப்புக்கு ‘ஐஎம்டிஏ’ ஆதரவு

படம்: ரெசொனேட் வோய்சஸ்

01 Oct 2026 - 3:01 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள ஊடக நிறுவனங்கள் பாரம்பரிய (live action) மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குறுநாடகங்களை (micro-dramas) உருவாக்க நிதி, பயிற்சிரீதியான ஆதரவுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.

அரசாங்க ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்கீழ் இது சாத்தியமாகிறது. ரசிகர்களின் மாறிவரும் படம் பார்க்கும் பழக்கங்களுக்கு ஏற்ப அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிறுவனங்களுக்கு உதவுவது நோக்கமாகும்.

திறன்களை வளர்க்க முயற்சி

கதையைத் தெளிவாக வெளிப்படுத்தும் உத்திகள், கைப்பேசிகளில் செங்குத்து வடிவிலான காணொளிகளை உருவாக்குவது போன்ற திறன்கள், செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்த வலுவான ஆக்ககரமான ‘புரோம்ப்ட்’ உத்தரவுகளை எழுதுவது போன்றவற்றைப் பங்கேற்பாளர்களிடம் வளர்ப்பது தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்-டிக்டாக் குறுநாடகத் திட்டத்தின் (Infocomm Media Development Authority-TikTok Microdrama Programme) நோக்கமாகும்.

50லிருந்து 100 குறுநாடகப் பாகங்களை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவுவது இலக்கு. ஒவ்வொரு பாகமும் அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள் நீடிக்கும்.

“பார்வையாளர்களின் பழக்கங்கள் மாறிவரும் வேளையில் வர்த்தகரீதியாக வெற்றிபெறும் கதைகளுக்கு வலுவான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான முறையில் கதையை வெளிப்படுத்தும் ஆற்றல், உணர்ச்சிகள்வழி பார்வையாளர்களை நெருக்கமாக்கிக்கொள்வது ஆகியவை தொடர்ந்து உறுதுணையாக இருக்கின்றன,” என்று தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) வியாழக்கிழமை (அக்டோபர் 1) கூட்டறிக்கையில் தெரிவித்தன.

“இப்படிப்பட்ட சூழலில் வழிகாட்டுதல் நடவடிக்கைகள், பயிலரங்குகள், வல்லுநர்கள் நடத்தும் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரின் கலாசாரம், கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட குறுநாடகங்களை உருவாக்கவும் தயாரிக்கவும் தேவையான நேரடித் திறன்களை இத்திட்டம் பங்கேற்பாளர்களிடையே வளர்க்கிறது,” என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தை

குறுநாடகங்கள், குறைவான நேரத்தில் முடியும் செங்குத்துக் காணொளிகள் ஆகியவற்றுக்கான உலகச் சந்தை இவ்வாண்டு 150 மில்லியன் டாலர் (191.93 மில்லியன் வெள்ளி) வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஎம்டிஏயும் டிக்டாக்கும் குறிப்பிட்டன. அவுல்&கோ ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி அவை இத்தகவலை வெளியிட்டன.

கடந்த ஜூன் மாதம் 48 மில்லியன் வெள்ளி மதிப்பிலான மின்னிலக்கப் பதிவுகள், ஆற்றல் மேம்பாட்டுத் திட்டத்தை (Digital Content and Capability Development Initiative) ஐஎம்டிஏ தொடங்கியது. புதிய திட்டம் அதன்கீழ் வருகிறது.

இதன் மூலம் பலனடைய விரும்பும் நிறுவனங்கள் முதலில் ஐஎம்டிஏ அங்கீகாரத்தைப் பெறவேண்டும். செப்டம்பர் மாத நிலவரப்படி 270 ஊடக நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்திறன் மேம்பாடுஆற்றல்டிக்டாக்பயிற்சிபயிலரங்கு