சிம்பா தொலைத்தொடர்பு நிறுவனத்துடனான $1.43 பில்லியன் ஒப்பந்தம் முடங்கியதைத் தொடர்ந்து, எம்1 தொலைத்தொடர்பு நிறுவனத்தை விற்க மாற்று வழிகளை ஆராயப்போவதாக கெப்பல் திங்கட்கிழமை (மே 18) அறிவித்துள்ளது.
சிம்பா மீதான விதிமீறல் விசாரணையை தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) தொடங்கியுள்ளதால், மே 21ஆம் தேதியுடன் முடிவடையும் ஒப்பந்தக் கெடுவை நீட்டிக்கப் போவதில்லை என்று கெப்பல் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா தெரிவித்துள்ளார்.
எம்1 - ‘சிம்பா’ இணைப்பு குறித்த மதிப்பீட்டு ஆய்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஆணையம் திங்கட்கிழமை (மே 18) அறிவித்தது.
சிம்பா, உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட தொலைத்தொடர்பு அலைவரிசைகளைப் பயன்படுத்தி கைப்பேசி சேவைகளை வழங்கியது தொடர்பான புகார் காரணமாக ஆய்வு நிறுத்தப்பட்டதாக அது கூறியது.
சிம்பா நிறுவனத்தின் உரிம நிபந்தனைகள், 1999ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அது கடுமையான விதிமீறலாகும்.
விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது. விசாரணை முடியும் வரை நிறுவனங்களின் இணைப்பு குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்படும்.
சிம்பா நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதற்கு $1 மில்லியன் வரை அல்லது அதன் ஆண்டு வருவாயில் 10 விழுக்காடு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
எம்1 நிறுவனத்தை விற்கும் திட்டம் 1 முதல் 2 ஆண்டுகள்வரை தாமதமாகலாம் என்றும், மே 21க்குப் பிறகு பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தடையில்லை என்றும் திரு லோ சின் ஹுவா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த 90 நாள்களுக்குள் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் கெப்பல் திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப தளம், கட்டமைப்புச் செலவுகள் குறைக்கப்படும். விளம்பரச் செலவுகளைக் குறைக்க ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக எம்1-இன் தலைமை நிர்வாகி மன்ஜோத் சிங் மான் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பங்குச்சந்தையில் சிம்பாவின் தாய் நிறுவனமான ‘துவாஸ்’ பங்குகள் 60% வரை சரிந்தன. ‘எம்1’ன் தாய் நிறுவனமான ‘கெப்பல்’ பங்குகள் 4% சரிவைக் கண்டன.

