‘ஐ மெசேஜ்’ மோசடி: $2.2 மில்லியன் இழப்பு

‘ஐ மெசேஜ்’ மோசடி: $2.2 மில்லியன் இழப்பு

2 mins read
f05c288e-f1a1-4259-b918-ae5508e9f3d7
சிங்கப்பூரில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஐ மெசேஜ் (iMessage) சேவையைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்துள்ளன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஐ மெசேஜ் (iMessage) சேவையைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்துள்ளன.

அரசாங்க அமைப்புகள் அல்லது நிஞ்சா வேன் (NinjaVan), ஜே&டி எக்ஸ்பிரஸ் (J&T Express), எஸ்பிஎக்ஸ் எக்ஸ்பிரஸ் (SPX Express) போன்ற விநியோக நிறுவனங்களின் குறுஞ்செய்தி போல் மோசடிக்காரர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்.

மோசடிக்காரர்களின் மோசடியால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட $2.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய 30,000க்கும் மேற்பட்ட ‘ஐ மெசேஜ்’ கணக்குகளை முடக்கியுள்ளதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘ஐ மெசேஜ்’ போன்ற மோசடிகளால் ஏற்படும் இழப்பு ஒரு மாதத்திற்குள் 80 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இம்மாதம் 5ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 24ஆம் தேதி முதல் ‘ஐ மெசேஜ்’ மோசடி தொடர்பாக 251 புகார்கள் பதிவாகியுள்ளன. அதன்மூலம் மட்டும் $1.2 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

விநியோக நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், நிதி நிறுவனங்கள் போன்ற பெயர்களில் போலியான குறுஞ்செய்திகளை மோசடிக்காரர்கள் பொதுமக்களுக்கு அனுப்புகின்றனர்.

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளைச் சொடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சில நேரங்களில், அத்தகைய குறுஞ்செய்திகளுக்கு ‘Y’ அல்லது ‘1’ எனப் பதிலளிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு அம்சங்களை முடக்குவதற்காக மோசடிக்காரர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

இணைப்புகளைச் சொடுக்கியதும், பொதுமக்கள் உண்மையான இணையத்தளங்களைப் போன்று வடிவமைக்கப்பட்ட போலியான இணையத்தளங்களுக்குச் செல்கின்றனர்.

தங்கள் பொருள்களைப் பெற அல்லது அபராதத்தைச் செலுத்த சிறிய கட்டணத்தைச் செலுத்துமாறு அந்தத் தளங்கள் கேட்கின்றன.

அப்போது பொதுமக்களின் கடன் அட்டை, தனிப்பட்ட வங்கி விவரங்களை மோசடியாளர்கள் திருடுகின்றனர். திருடப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் புதிய சாதனங்களில் அங்கீகாரமற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

அரசாங்க அமைப்புகளும் விநியோக நிறுவனங்களும் ‘ஐ மெசேஜ்’ சேவையைப் பயன்படுத்தி பொதுமக்களைத் தொடர்புகொள்வதில்லை என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

எனவே, ‘ஐ மெசேஜ்’ மூலம் வரும் தேவையற்ற செய்திகள் குறித்துப் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மோசடிநிதி மோசடிஇழப்பு