சிங்கப்பூருக்குக் குடியேறிகள் அவசியம், சிங்கப்பூர் அவர்களை வரவேற்கும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார். ஆனால், அத்தகையோர் உள்ளூர்ச் சமூகத்தின் வழக்கங்களைத் தெரிந்து நடக்கவேண்டும் என்றார் அவர்.
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் கழகத்தில் பேசிய திரு லீயிடம் சிங்கப்பூரின் குடியேற்றக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
குடியேற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களைக் கட்டுப்படுத்துவதுடன் பேதமின்றி அதைச் செய்ய சிங்கப்பூர் அரசாங்கம் எத்தகைய வழிகளைக் கையாள்கிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஊழியரணியில் குடியேறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்ற திரு லீ, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் முன்னெடுத்துச் செல்ல அத்தகையோர் தேவைப்படுகின்றனர் என்றார்.
சிங்கப்பூரின் ஊழியரணியில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்கள் குடியேறிகள் என்றும் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தொடங்கி கட்டுமான ஊழியர்கள் வரை குடியேறிகள் அனைத்துவித வேலைகளையும் செய்வதாகத் திரு லீ கூறினார்.
மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டினர் என்பதால் பாதுகாப்பு அபாயங்களுக்கான வாய்ப்பிருக்கிறது என்று சுட்டிய திரு லீ, உளவு பார்த்தல், பொய்த் தகவலைப் பரப்புதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை எழக்கூடும் என்றார்.
“ஆனாலும் சிங்கப்பூருக்குக் குடியேறிகள் தேவை. அவர்களை ஏற்றுக்கொள்வதுடன் சிங்கப்பூரின் சட்டத்திட்டங்கள் யாவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.
அதேநேரம் சிங்கப்பூரர்களும் குடியேறிகளை அங்கீகரிப்பவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் நமக்கு உதவிசெய்ய வந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று திரு லீ வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
குடியேறிகளும் சிங்கப்பூரில் உள்ள வழக்கங்களை அறிந்திருப்பது முக்கியம் என்ற திரு லீ, தேவையில்லாத சலசலப்பையும் சச்சரவையும் தவிர்க்க அவ்வாறு செய்யவேண்டும் என்றார்.
சிங்கப்பூரின் சட்டங்களையும் சமூகப் பழக்கவழக்கங்களையும் குடியேறிகள் மதித்து நடக்கவேண்டும் எனத் திரு லீ கேட்டுக்கொண்டார்.
“சிங்கப்பூரில் இருப்பது அவ்வளவு கடினம் அல்ல. நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்வோம்,” என்ற அவர், கொவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பராமரிக்கப்பட்டையும் சுட்டினார்.

