குடிநுழைவு, சோதனைச்சாவடிகளில் வழக்கநிலை திரும்பியது

1 mins read
1db794d0-e855-4964-bc86-26bb1ef69d16
படம்: LEON KHOR/FACEBOOK -

சிங்கப்பூர் குடிநுழைவு அனுமதிக்கான கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டு, தற்போது வழக்கநிலை திரும்பிவிட்டது என்று ஃபேஸ்புக் வழியாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3:58 மணிக்கு அது குறித்து சமூக ஊடகங்கள்வழி ஆணையம் தகவல் வெளியிட்டது.

கணினிக் கட்டமைப்பில் எதனால் இடையூறு ஏற்பட்டது என்பதை விசாரித்து வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காலை 11.28 மணிக்கு தங்களது கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்து ஆணையம் தகவல் வெளியிட்டது. பயணிகள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தள்ளிப்போடும்படியும் அது கேட்டுக்கொண்டது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறால் நிலவழி, வான்வழி சோதனைச்சாவடிகளில் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

இடையூறால் சாங்கி விமான நிலையத்திலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

எல்லா விமான முனையங்களிலும் புறப்பாடு மற்றும் வருகைப் பயணிகளுக்கான தானியக்கக் குடிநுழைவு அனுமதித் தடச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

பயண நடவடிக்கைகள் தாமதமானதால் பல பயணிகள் தங்களது சமூக ஊடகங்கள் வழி அதிருப்திகளைப் பதிவிட்டு வந்தனர்.

குறிப்புச் சொற்கள்