புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். இதனால் நாட்டிற்குள் அதிகமானவர்களை சிங்கப்பூர் வரவேற்க முடியும் என்று போக்குவரத்து தற்காலிக அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஜனவரி 26) அன்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் ‘சிங்கப்பூர் கண்ணோட்டம்’ எனும் மாநாட்டில் சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை குறித்து அவர் பேசினார்.
2024ஆம் ஆண்டில் 0.97 என்று மிக்க குறைந்த அளவில் இருந்த சிங்கப்பூரின் மொத்த கருவுறும் விகிதத்தை ‘மிகவும் மோசமானது’ என்று வர்ணித்தார் திரு சியாவ்.
நமது சமூகத்தையும் பொருளியலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க குடிநுழைவு மிக முக்கியமானது என்ற உண்மையை நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“ஆனால் ஒருங்கிணைப்பு எந்த அளவுக்குப் பலன் அளிக்கிறது என்பதைப் பொறுத்தே குடியேறிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியும். மேலும் நீங்கள் அவர்களை நன்கு ஒருங்கிணைக்க முடிந்தால் மட்டுமே வெளிப்படையான நிலையில் இருக்கவும் புதியவர்களை வரவேற்கவும் முடியும்,” என்று அவர் விவரித்தார்.
“புதியவர்களைச் சிங்கப்பூரர்களாக உணர வைக்க வேண்டும். அதே நேரத்தில் சிங்கப்பூரர்களையும் புதிய குடியேறிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை உணர வைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கு இரு தரப்பிலிருந்தும் முயற்சி தேவை.
புதிய குடியேறிகள் சமூகத்திற்குப் பங்களிக்கவும், சிங்கப்பூரராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் உணர்வுபூர்வமாக உழைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளையில், சிங்கப்பூரர்கள் திறந்த மனத்துடன் தங்கள் தேசிய அடையாளம் இன்று உருவாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடியேறிகள் உள்ளூர் பழக்கவழக்கங்கள், நடைமுறைகளுக்கு ஏற்ப மாறுவதற்கு நேரம் எடுக்கும் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சியாவ் கூறினார்.
2025, ஜூன் மாத நிலவரப்படி, மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரின் ஆறு மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்.
சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் நீண்ட காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் ஒரு முயற்சியாக இருந்து வருகிறது என்று திரு சியாவ் கூறினார்.
இன நல்லிணக்க தினம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இன ஒருங்கிணைப்புக் கொள்கை போன்ற நேரடித் தலையீடுகள் உட்பட சமூக ஒற்றுமையைப் பேணுவதற்கான சில அரசாங்க முயற்சிகள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
“சிங்கப்பூர் அடையாளம் சிக்கலானது. அது பரிணாம வளர்ச்சியடைகிறது. ஆனால் அதை கவனமாக வளர்த்து கட்டிக்காக்க வேண்டும்,” என்று அமைச்சர் கூறினார்.
“ஆனால் நாம் இதில் கவனம் செலுத்தி, அதில் சரியான திசையில் செல்கிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.

