குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரி ஒருவர், சாங்கி விமான நிலையம் வழியாக சிங்கப்பூரைவிட்டுப் புறப்படவிருந்த வெளிநாட்டுப் பயணிகள் ஐவரிடமிருந்து குறைந்தது 650 வெள்ளியைக் களவாடினார்.
அந்த ஐவரும் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய பிறகே தங்களது பணம் பறிபோனதை உணர்ந்தனர்.
வீட்டில் நிதிச் சிக்கலை எதிர்கொண்ட முகம்மது ஃபாதில் முகம்மது சாலே, 36, என்ற அந்த ஆடவருக்குத் திங்கிட்கிழமை (ஆகஸ்ட் 26) 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, மூன்று பேரிடம் குறைந்தது 550 வெள்ளி திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அக்குற்றச்செயல்களைப் புரிந்தார்.
எஞ்சிய பணம் தொடர்பிலான மேலும் இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.
திருடிய பணத்தில் எதனையும் ஃபாதில் திருப்பித் தரவில்லை.
குற்றமிழைத்தபோது, ஃபாதில் சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையப் புறப்பட்டுக்கூடத்தில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபாதிலால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வனுவாட்டு, வியட்னாம், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
வனுவாட்டுப் பயணியிடமிருந்து ஃபாதில் பணம் திருடியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அவரிடமிருந்து $50 திருடியதை ஃபாதில் ஒப்புக்கொண்டார்.
அதுபோல், தாய்லாந்துப் பெண் பயணியிடமிருந்து 400 வெள்ளியும் வியட்னாமியப் பெண் பயணியிடமிருந்து குறைந்து 100 வெள்ளியும் அவர் களவாடியதாகக் கூறப்பட்டது.
தாய்லாந்துப் பெண் தமது பணம் திருடப்பட்டது குறித்து ஐசிஏ இணையத்தளம் வழியாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஐசிஏ விசாரணை நடத்தியது. பின்னர் ஃபாதிலின் சக ஊழியர்களில் ஒருவர், அவர்மீது 2023 அக்டோபர் 1ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.
ஃபாதிலுக்கு $10,000 பிணைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து, தமது சிறைவாசத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய குற்றங்கள், அனைத்துலகப் பயண நடுவமாகத் திகழும் சிங்கப்பூரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மார்க் சியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

