தென்கொரிய விமான நிலையங்களில் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற சிங்கப்பூரர்கள் வரிசைகளில் நிற்கத் தேவையில்லை. தென்கொரியாவின் தானியக்கக் குடிநுழைவு முறையின் விரிவாக்கத்தால் இது சாத்தியமாகிறது.
தென்கொரியாவுக்குள் நுழையும், அங்கிருந்து புறப்படும் 17 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தானியக்கக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்த முடிவதாக சோலில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றிறங்கியவுடன் சிங்கப்பூர் பயணிகள் இந்தத் தானியக்கக் குடிநுழைவு நடைமுறைக்கு ஒருமுறை பதிவுசெய்ய வேண்டும்.
அடுத்தடுத்த முறை தென்கொரியாவுக்குச் செல்வோர், அங்குள்ள எந்தவொரு விமான நிலையத்திலும் தானியக்கக் குடிநுழைவு வாயில்களைப் பயன்படுத்தலாம்.
இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையத்தில் மட்டுமே தற்போது இதற்கான பதிவு நடைமுறை உள்ளது. வருங்காலத்தில் தென்கொரியாவின் மற்ற விமான நிலையங்களுக்கும் இது நீட்டிக்கப்படக்கூடும்.
பயணியின் தற்போதைய கடப்பிதழ் காலாவதியாகும் வரை இந்தப் பதிவு செல்லுபடியாகும்.
சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் நாடுகளில் தென்கொரியா பிரபலத் தெரிவாக உள்ளது. தென்கொரிய வெளியுறவு அமைச்சின் தரவுகளின்படி, 2024ல் ஏறக்குறைய 380,000 சிங்கப்பூரர்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.
தானியக்க நடைமுறை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கான சிங்கப்பூரர்கள் வரிசைகளில் நிற்க வேண்டியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தானியக்க முறையால் பயனடைவோரில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், தைவான், பிரிட்டன் போன்ற பகுதிகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.

