ஜூரோங் தீவில் குறைந்த கரிம வெளியேற்றத் தொழில்நுட்பங்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பகுதியால் கடல்சார் சூழல்மீது ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பசிபிக்லைட் என்ற மின்சார உற்பத்தி நிறுவனத்தின் 670 மெகாவாட் இயற்கை எரிவாயு மின்னாலையும் மின்சாரச் சேமிப்புக் கட்டமைப்பும் 2029ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு 864,000 நான்கறை வீடுகளின் ஓராண்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும்.
இருப்பினும், கடல்சார் சுற்றுச்சூழலை ஆலை பாதிக்குமா என்பதுகுறித்து 430 பக்க அறிக்கை ஒன்று பிப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலக்கும்.
ஆலையைக் குளிர்விக்க எடுக்கப்படும் கடல்நீர் மீண்டும் கடலில் கலக்கப்படும். அவ்வாறு வெளியேறும் கடல்நீரின் வெப்பம் அதிகமாக இருக்கலாம் என்றும் அதில் குளோரின் கலந்திருக்கலாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. அதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு வரக்கூடுமா என்பது ஆராயப்பட்டது.
கடினமான பவளப்பாறைகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும். அளவுக்கு அதிகமான வெப்பம் பவளப்பாறைகளை வெளிறச்செய்யக்கூடும் என்று அறிக்கை சொன்னது.
மின்சார ஆலைக்கு கிட்டத்தட்ட 700 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஹிலியோஸ் செகண்டரி பவளப்பாறை. ஹிலியோஸ் பவளப்பாறை குறித்து 2012ஆம் ஆண்டு தேசியப் பூங்காக் கழகம் மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரியவந்தது.
அழியக்கூடிய நிலையில் இருந்த ஒருசில வகை பவளப்பாறைகளைக் காப்பாற்ற நீர்மட்டத்தின்கீழ் உள்ள ஹிலியோஸ் பாறைகள் உதவியுள்ளதாக ஆய்வு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கடல்நீரின் வெப்பம் எந்தளவு அதிகமாக இருக்கக்கூடும் என்பதும் ஆராயப்பட்டது.
கடல்நீர்த் தரம் குறித்த ஆசியான் அமைப்பின் வழிகாட்டலின்படி, ஆலையிலிருந்து வெளியேறும் கடல்நீரால் சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரக்கூடாது.
அண்மையில் மேற்கொண்ட ஆய்வுமூலம் கழிவுநீர் வெளியேறும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் சுற்றளவுக்கு கடல்நீரின் வெப்பம் 2 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயரலாம் என்று கண்டறியப்பட்டது.

