சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்கு மின்சாரக் கட்டணங்களும் சமையல் எரிவாயுக் கட்டணங்களும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டண உயர்வுக்கு மத்திய கிழக்கு மோதலின் விளைவாக அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் முக்கிய காரணம்.
இந்தக் காலாண்டுக்குப் பின்னரும் கட்டண உயர்வு நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் மின்சார உற்பத்திக் குழுமமான எஸ்பி குழுமம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், கட்டண உயர்வை அறிவித்தது.
வீடுகளுக்கான மின்கட்டணம் முந்திய காலாண்டைக் காட்டிலும் 2.1 விழுக்காடு அதிகமாக இருக்கும். அதாவது, ஒரு கிலோவாட் மணிக்கு 27.27 காசுகளாக அந்தக் கட்டணம் உயரும். பொருள் சேவை வரி சேர்க்கப்படாமல் கணக்கிடப்பட்ட கட்டணம் இது.
எரிசக்திச் சந்தை ஆணையமும் செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு, எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிப்பதற்கான ஒரு பகுதி மட்டுமே என்று அந்த அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் ஏறத்தாழ 95 விழுக்காடு இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் மின்சாரக் கட்டணங்களை ஒழுங்கமைக்கும் ஆணையம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை மறுஆய்வு செய்யும். மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு ஆகும் செலவுகளின் அடிப்படையில் கட்டணங்களை ஆணையம் நிர்ணயிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான செலவு கூடும்போது, சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பயனீட்டாளர்களும் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களும் அதிகரிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
முந்தைய காலாண்டின் முதல் இரண்டரை மாதங்களுக்கான சராசரி எரிபொருள் செலவின் அடிப்படையில் கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஜனவரி முதல் மார்ச்சின் நடுப்பகுதி வரையிலான சராசரிச் செலவுகளின் அடிப்படையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
“ஏனெனில் இயற்கை எரிவாயு விலைகள் பிப்ரவரி 28க்குப் பிறகே உயரத் தொடங்கின. அதனால் இரண்டாம் காலாண்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் எண்ணெய் விலை ஏற்றத்தால் ஓரளவே பாதிக்கப்பட்டன.
“மத்திய கிழக்கு மோதலினால் ஏற்றம் கண்ட விலைகளின் முழுமையான தாக்கம் ஆண்டின் பிற்பகுதியிலேயே தெரியவரும்.,” என்று அது விளக்கியது.

