https://www.straitstimes.com/singapore/charity-that-helps-vulnerable-young-people-recognises-156-youth-in-its-first-mega-graduation
அலேசாண்டிரியா வான் பூன்ஸ்டிரா-நசேஷனின் தாயார் மலேசியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிங்கப்பூர் திரும்பியதும் அவர் உயர்நிலை 1ல் இங்குள்ள பள்ளிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள சிரமப்பட்டார்.
சிங்கப்பூரரான 15 வயது அலேசாண்டிரியா, பகடிவதைக்கும் ஆளானார். பள்ளியிலும் அவருக்கு நண்பர் இல்லை. இந்த நிலையில் ஆலோசனை பெற விரும்பிய அவர் 2024 செப்டம்பரில் இம்பார்ட் அறநிறுவனத்தைப் பற்றி தெரிந்துகொண்டார்.
அங்கு வலிமையூட்டும் பயிற்சிகளிலும் நடன வகுப்புகளிலும் சேர்ந்து தனது பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்த அவர் மே 10ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் நடனமும் ஆடினார்.
தெலுக் ஆயரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்பார்ட்டின் சமூகத் திட்டங்களில் பங்கேற்ற 156 இளையர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் அலேசாண்டிரியாவும் ஒருவர்.
‘இம்பார்ட்’ நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான நரசிம்மன் டிவாசிஹா மணி, கல்விக்கு அப்பால் இளையர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்றார்.
2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்பார்ட், எளிதில் பாதிக்கக்கூடிய இளையர்களுக்கு உதவி வருகிறது.
இது, இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தொண்டூழியர்களுடன் இணைத்துப் பயிற்சி மற்றும் குழுக்கள், திட்டங்கள் வழியாக உதவிகளை வழங்கி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இளையர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இன்றைய வேகமான, மின்னிலக்க உலகிற்கு ஏற்ப இளையர்கள் செயல்பட முடியாமல் தவிப்பது பற்றிய விவாதங்கள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இது அவர்களின் மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கிறது என்றார்.
“சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இளையர்களுக்கு அர்த்தமுள்ள தொடர்புகள் இல்லாதது சவால்களை மேலும் சிரமமாக்கிறது. சமூக அடிப்படையிலான பராமரிப்புகள் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க இம்பார்ட் அவர்களுடன் இணைந்து செயல்படுகிறது,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

