தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரின்செப் ஸ்திரீட்டில் சமூக அமைப்புகளுக்குப் புதிய மையம்

2 mins read
1e4067ea-105f-41e3-9b26-519ce8cd8941
சமூக நோக்கம் கொண்ட அமைப்புகளின் மையமான ‘த ஃபவுண்ட்ரி’ கட்டடத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நவம்பர் 29ஆம் தேதி திறந்து வைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளையர் நல அமைப்பான ‘இம்பார்ட்’, தொடக்கத்தில் 40 வயது நரசிம்மன் திவாசிகமணியின் வீட்டிலிருந்து செயல்பட்டது.

இப்போது இவரது அமைப்புக்கும் சமூக நோக்கம் கொண்டுள்ள வேறு சில அமைப்புகளுக்கும் ‘த ஃபவுண்ட்ரி’ (The Foundry) கட்டடம், ஒரே கூரையின்கீழ் இடம் தந்துள்ளது.

பிரின்செப் ஸ்திரீட்டில் முன்னதாகத் தேர்தல் துறை இருந்த இடத்திலுள்ள ‘த ஃபவுண்ட்ரி’, அதன் கட்டடத்திற்குள் அமைந்துள்ள எல்லா நிறுவனங்களுக்கும் திட்டங்கள், தீர்வுகள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதற்கான வளங்களைத் தரவுள்ளது.

புதிய ‘த ஃபவுண்ட்ரி’ கட்டடத்தை நவம்பர் 29ஆம் தேதி திறந்து வைத்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களைச் சந்தித்து உரையாடினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோரைக் காட்டிலும் நிறுவனர்கள் மாறுபட்டவர்கள். இயக்கங்கள் இந்த நிறுவனர்களை முன்னெடுத்துச் செல்கின்றன,” என்றார்.

பிரச்சினைகளைக் கண்டறிந்து, என்னென்ன நடைமுறைகள் சாத்தியம் என்பது குறித்த சிந்தனைகளுக்குச் சவால் விடுத்து தீர்வுகளைக் கண்டுபிடிப்பது நிறுவனர்களுக்கு உரித்த எண்ணப்போக்கு என்றும் திரு தர்மன் கூறினார்.

17,000க்கும் அதிகமான சதுர அடியில் அமைந்த வளாகத்தைக் கொண்டுள்ள ‘த ஃபவுண்டரி’, வெவ்வேறு அளவில் அலுவலக இடங்களைக் கொண்டுள்ளது. சந்திப்பு அறைகள், கூட்ட அறைகள், பயிற்சி இடங்கள், வலையொளி அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்தச் சமூக அமைப்புகளிடையே கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கப் புதிதாக ‘ஃபவுண்ட்ரி ஃபார்வரட்’ நிதியம் (Foundry Forward Fund) ஒன்றும் தொடங்கப்படும்.

அந்த நிதியத்தின்கீழ், கட்டடத்தில் தளம்கொண்டுள்ள அமைப்புகளுக்கு 500,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரே கூரையின்கீழ் சமூக நோக்கம் கொண்டுள்ள அமைப்புகளைக் கொண்டிருப்பது தமது அமைப்புக்கு வரப்பிரசாதமாக இருப்பதாக திரு நரசிம்மன் குறிப்பிட்டார்.

இம்பார்ட் அமைப்பின் நிறுவனர் நரசிம்மன் திவாசிகமணியுடன் (வலது) நிர்வாகி முகம்மது நரிஷ் முகம்மது நோ.
இம்பார்ட் அமைப்பின் நிறுவனர் நரசிம்மன் திவாசிகமணியுடன் (வலது) நிர்வாகி முகம்மது நரிஷ் முகம்மது நோ. - படம்: த மஜூரிட்டி டிரஸ்ட்

“அறநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அருகருகே இருப்பதால் எங்களுக்குள் இயல்பாகவே நட்பு உருவாகிறது. வளங்களைத் திரட்டி, ஊடகத் தொடர்பு அல்லது மக்கள் தொடர்புப் பயிற்சி சம்பந்தப்பட்ட திறன் மேம்பாடு செய்யவும் இது எங்களுக்கு உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

“எங்களுக்கென இடம் ஒன்று இருப்பதால் நாங்கள் இனி தங்குதடையின்றி வேலை செய்யலாம்,” என்று திரு நரசிம்மனுடன் இணைந்து பணியாற்றும் நிர்வாகியான முகம்மது நரிஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்