குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தொடர்பான மோசடிகளில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து குறைந்தது $8.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு வகை மோசடிகள் மூலம் இதுவரை குறைந்தது 148 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐசிஏ மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளன.
இவற்றில் ஒரு வகை மோசடி, ஆணைய அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பணம் பறிப்பது; மற்றொரு வகை, சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க உதவுவதாகக் கூறும் போலி விளம்பரங்கள் தொடர்பானது.
முதல் வகை மோசடியில், ஆணையத்திலிருந்து பேசுவதாகக் கூறி மோசடி செய்வோரிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வரும். அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவோ தொலைபேசி எண்கள் மோசடிச் செய்திகளை அனுப்புவது போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவோ மோசடிக்காரர்கள் அச்சுறுத்துவார்கள்.
பின்னர் அந்த அழைப்பு, சீன அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்யும் மற்றொரு மோசடி நபருக்கு மாற்றப்படும். அவர் ‘விசாரணை’ அல்லது ‘பிணை’ போன்ற காரணங்களைக் கூறி பணத்தை மாற்றுமாறு அல்லது ரொக்கமாக ஒப்படைக்குமாறு கேட்பார்.
சில சம்பவங்களில், போலி ஆவணங்களில் கையெழுத்திட அடையாளம் தெரியாத நபர்களைச் சந்திக்குமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பலமுறை பணத்தை மாற்றிய பிறகோ மோசடி நபரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போதோதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர். ஜனவரி முதல் இதுபோன்று குறைந்தது 117 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; இவற்றில் குறைந்தது $8.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது வகை மோசடியில், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியைப் பெற உதவுவதாக வரும் விளம்பரங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் காண்பார்கள்.
அந்த விளம்பரங்களைச் சொடுக்குவோர், ஒரு போலி ஆலோசனை நிறுவனத்தின் வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு ஒரு படிவத்தின் மூலம் அவர்களின் கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவர். பின்னர் மோசடி செய்வோர் வாட்ஸ்அப் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு, நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல $200 முதல் $90,000 வரையிலான ‘கட்டணத்தைச்’ செலுத்துமாறு கேட்பார்கள்.
“நிறுவனங்களில் முதலீடு செய்தல், கல்விச் சான்றிதழ்களை வாங்குதல், நன்கொடைகள் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பத்தில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்ற போர்வையில்,” இது செய்யப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் வங்கிப் பரிமாற்றம் செய்யுமாறு அல்லது அடையாளம் தெரியாத நபர்களுக்கு ரொக்கமாகப் பணம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் பிறகு, ஆணையத்திலிருந்து வருவது போன்ற போலித் தானியங்கி மின்னஞ்சல் அவர்களுக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் ஆணையத்தின் சின்னத்துடன்கூடிய போலி கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட்டிருக்கும்.
ஆணையத்திடம் அத்தகைய கடிதங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும்படி கேட்கும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோரில் சிலர் உணர்ந்தனர்.
இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் தொடர்பான குறைந்தது 31 புகார்கள் குறித்து ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது; இவற்றில் குறைந்தது $400,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு விண்ணப்பத்தையும் தனது இணையத்தளம் வாயிலாகச் சமர்ப்பிக்குமாறு ஆணையம் கூறியுள்ளது.
ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் ஆணையத்திலிருந்துதான் வந்ததா என்பதைச் சரிபார்க்க விரும்புவோர், அதன் கருத்துப் படிவம் வழியாகவோ தொலைபேசி மூலமாகவோ அவ்வாறு செய்யலாம்.
