மின்சிகரெட் தொடர்பான பொருள்கள் இறக்குமதி; இரு ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
0776dbe0-af76-419a-9c0b-1d11f4d3b43d
அமிருல் ஓட்டிவந்த காரில் மின்சிகரெட்டுகளைக் குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்ததாக ஆணையம் கூறியது. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

மின்சிகரெட் தொடர்புடைய மொத்தம் 2,000க்கும் மேற்பட்ட பொருள்களைக் கடத்தியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அதிகாரிகள் நவம்பர் 15ஆம் தேதி கைதுசெய்தனர்.

இரு வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய அவ்விருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

19 வயது லிம் டெக் வீ, 21 வயது முகமது அமிருல் இக்பால் முகமது நஸ்ரி ஆகியோர்மீது மின்சிகரெட் தொடர்புடைய பொருள்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததன் தொடர்பில் மொத்தமாக மூன்று குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமையன்று (நவம்பர் 17) சுமத்தப்பட்டன.

இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் லிம், நவம்பர் 15ஆம் தேதி காலை 9 மணியளவிலும் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் அமிருலும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் தொடர்புடைய பொருள்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டிவந்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் நவம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அமிருல் ஓட்டிவந்த காரில் மின்சிகரெட்டுகளைக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சுகாதார அறிவியல் ஆணையம் மேலும் கூறியது.

லிம் ஓட்டி வந்த வேனில் மின்சிகரெட் தொடர்பான பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்