மலேசியாவிலிருந்து சிங்கப்பூரிக்குள் சட்டவிரோமாக டீசல் இறக்குமதி செய்து, அதற்கான வரியைச் செலுத்தாமல் தவிர்த்ததோடு, அதனை விநியோகித்த குற்றத்தையும் ஒப்புக்கொண்ட இரு சிங்கப்பூரர்களுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தலா $3.3 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
இருவரும் ஏறத்தாழ 4.5 மில்லியன் லிட்டர் அளவு டீசலை இறக்குமதி செய்துள்ளனர். அந்த எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை பெறாததோடு அது மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
வரி செலுத்தாமல் குறைந்த விலையில் இறக்குமதி செய்த குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர். சுவா இ ஹொங் 51, இங் லியோக் குவீ 48, ஆகிய இருவர்மீதும் ஏறத்தாழ $905,000 மதிப்புள்ள வரித்தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையில் அவர்கள் குற்றங்களைப் புரிந்துள்ளனர். அவர்கள் இறக்குமதி செய்த எரிபொருள் வாகனங்களுக்கு பயன்படக்கூடியவை.
குற்றச்செயல் நடந்தபோது உள்ளூரில் இயங்கும் பிஎஸ் எனர்ஜி குழமத்தின் துணை நிறுவனங்களான சிஎன்சி பெட்ரோலியம் பிரைவெட் லிமிடெட், பிஎஸ் எனர்ஜி பிரைவெட் லிமிடெட் ஆகிய இரு துணை நிறுவனங்களில் சுவா, இங் இருவரும் நிர்வாக இயக்குநர் பதவி வகித்தவர்கள்.
தண்டனை விதிப்பின்போது, பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு, $2.5 மில்லியனுக்கு மேல் செலுத்தப்படாத வரி போன்ற 16 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
குற்றங்கள் குறித்து கிடைத்த தகவலைக் கொண்டு, அரசாங்க அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு லாபத்துக்கென வாடிக்கையாளர்களுக்கு அந்த எரிபொருள் மறுவிற்பனை செய்யப்பட்டதைக் கண்டறிந்தன.
