உள்ளூர் பணியாளர்களைக் கொண்ட உணவு நிறுவனத்துக்கு நிர்வாக உதவிக்கு என ஒருவர் தேவைப்பட்டுள்ளார்.
அதன் இயக்குநர் பலமுறை முயன்றும் அவருக்கு உள்ளூரில் வேலையாட்கள் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதனால் அவர் வேலைவாய்ப்பு முகவை நிறுவனத்தை நாடினார். ஒரு வெளிநாட்டுப் பணிப்பெண் வரவழைக்கப்பட்டு, அவரது பணி அனுமதி சீட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த வீட்டுப் ‘பணிப்பெண்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையில் அந்தப் பெண் சிங்கப்பூர் இயக்குநர் ஒருவரிடம் நிர்வாகப் பணியாளராகப் பணிபுரிந்தார்.
சட்டத்துக்கு எதிராக இந்தக் குற்றத்தைப் புரிந்த அந்தப் பணிப்பெண், முகவையின் பணியாளர், உள்ளூர் நிறுவன இயக்குநர் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தீர்ப்பளித்துள்ளது.
வேலைவாய்ப்பு நிறுவனப் பணியாளரான பிலிப்பீன்சை சேர்ந்த 42 வயது விலரோசா மா லோர்ட்ஸ் மனங்கையா குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு நான்கு வார சிறைத் தண்டனையும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
‘பணிப்பெண்’ என்ற பெயரில் நிர்வாக உதவியாளராக வேலை பார்த்த 31 வயது பரிக்கிட் கிரிஸ்டி அன் அபபோவுக்கு மூன்று வாரச் சிறை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) விதிக்கப்பட்டது.
பிரின்ஸ் எம்போரியம் என்ற பிஸ்கட், மளிகைப்பொருள்களை வணிகம் செய்யும் சிங்கப்பூரரான 50 வயது ஷேசாட் சம்சுதின் கரிமி என்பவரின் வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை குற்றச்செயல்களும் ஊதிய முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளன.

