சென்ற ஆண்டு (2023) இறுதியில் மாமியாரை மானபங்கப்படுத்திய ஆடவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் மகளுக்கும் மருமகனுக்கும் உதவ, அந்தப் பெண் ஆடவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, தாம் உறங்கிக்கொண்டிருந்தபோது தமது முடியை ஆடவர் நுகர்வதை உணர்ந்த பிறகே மாமியாருக்கு மருமகனின் செயல்களைப் பற்றித் தெரியவந்தது.
வீட்டில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான படத்தைப் பார்த்தபின்பு, அவரின் செயல்களைப் பற்றி அறிந்து மாமியார் அதிர்ந்துபோனார்.
மாமியாரின் அடையாளத்தைப் பாதுகாக்க, அந்த 37 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அக்டோபர் 17ஆம் தேதி, ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 51 வயது மாமியார் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆடவரின் வீட்டில் தங்கத் தொடங்கினார்.
அங்கு ஏறக்குறைய 4 மாதங்கள் தங்கியிருந்த அவர், வரவேற்பறையில் தூங்கினார்.
அந்த ஆடவர் சென்ற ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒருமுறைக்குமேல் மாமியாரை மானபங்கப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, மாமியாரைத் தான் மானபங்கப்படுத்தியதை அவர் பதிவு செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆடவரை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


