மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மாதுக்கு ஆறு வாரச் சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மாதுக்கு ஆறு வாரச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Jun 2026 - 4:49 pm

2 mins read

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கிட்டத்தட்ட மும்டங்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு திங்கட்கிழமை (ஜூன் 29) ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாம்சன் சாலையில் அஷ்வினி இளவரசன், 30, ஓட்டிய வாகனம் விபத்துக்குள்ளானது. மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதிய கவனமின்றி வாகனத்தை ஓட்டியது என்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அஷ்வினி, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து 54 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஜூலை 14ஆம் தேதி இரவு 7 மணியளவில், ஜூரோங்கில் தம் நண்பர்களுடன் சேர்ந்து அஷ்வினி மது அருந்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரவு 9.30 மணியளவில் மது அருந்துவதை நிறுத்திய அவர், சிராங்கூனில் உள்ள தமது வீட்டிற்கு தாம்சன் சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தபோது, வேறொரு கார்மீது மோதினார். அஷ்வினியின் கார் மோதிய வேகத்தில் அந்த கார், முன்னால் சென்ற மற்றொரு கார்மீது மோதியது.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர், அஷ்வினியிடம் இருந்து மது வாடை வீசுவதைக் கவனித்து, அவருக்குச் சுவாசப் பரிசோதனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அஷ்வினி கைது செய்யப்பட்டார். அவரின் சுவாசப் பரிசோதனையில் 100 மில்லிலிட்டர் சுவாசத்திற்கு 95 மைக்ரோகிராம் மது இருந்தது கண்டறியப்பட்டது. இது, அனுமதிக்கப்பட்ட வரம்பான 35 மைக்ரோகிராமைவிட கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகம்.

அஷ்வினியின் கார் மோதிய முதல் காரில் பயணம் செய்த 35 வயது பயணியின் முழங்காலிலும் விரலிலும் காயம் ஏற்பட்டது. அவருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

மற்றொரு காரை ஓட்டிய 72 வயது ஆடவருக்கு முன்கை, முழங்காலில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. அஷ்வினி அந்த முதியவருக்கு இழப்பீடாக $9,000 செலுத்தியுள்ளார். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தாம் மோதிய கார் ஓட்டுநருக்கும் அஷ்வினி $6,000 இழப்பீடு வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்