சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பாட்டில்கள் மற்றும் பானக் கலன்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரங்களில், பொதுமக்கள் சிலரின் அலட்சியத்தால் தேவையற்ற குப்பைகள் போடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன.
‘பிசிஆர்எஸ்’ என்ற இத்திட்டத்தை நிர்வகிக்கும் அதே பெயரிலான நிறுவனம், இது போன்ற தவறான செயல்கள் முறையாக மறுசுழற்சித் திட்டத்தில் பங்கேற்போருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு இயந்திரங்களையும் பழுதடையச் செய்கின்றன என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.
தீவுமுழுவதும் நிறுவப்பட்டுள்ள 1,200 மறுசுழற்சி இயந்திரங்களில், பானப் பாட்டில்களுக்குப் பதிலாகப் பல்வேறு கழிவுப் பொருள்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
காலணிகள், உள்ளாடைகள், பொம்மைத் தோட்டாக்கள், சிகரெட் துண்டுகள், உணவுப் பொட்டலங்கள், பயன்படுத்தப்பட்ட அழுக்குத் தாள்கள், உணவு எச்சங்கள் போன்றவை அவற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டத் திட்டத்தில் இதுவரை 5.5 மில்லியன் பயன்படுத்தப்பட்ட போத்தல்களும் பானக் கலன்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மறுசுழற்சிக்காகப் பெறப்பட்ட அவற்றில் எந்த அளவு குப்பைகள் சேர்ந்தன என்பதை பிசிஆர்எஸ் வெளியிடவில்லை.
பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பாட்டில்களையும் உலோகக் கலன்களையும் மட்டுமே மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அவற்றை இயந்திரங்களில் போடும் பொதுமக்களுக்கு அவர்கள் தொடக்கத்தில் செலுத்திய கூடுதல் கட்டணங்களில் இருந்து 10 காசு அவர்களின் இசிலிங்க் அட்டை, அல்லது டிபிஎஸ்பேலா கணக்குகளில் திருப்பி தரப்படுகிறது.
இருப்பினும், சிலர் தேவையற்ற குப்பைகளையும் பயன்பாடற்ற கழிவுகளையும் இயந்திரங்களுக்குள் போடுவதால், அவற்றில் உள்ள உணர்வுக் கருவிகளில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக, இயந்திரங்கள் பழுதடைந்து செயல்படாமல் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.


