தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு: சிங்கப்பூருடன் கைகோக்க சுவீடன் விருப்பம்

2 mins read
2ba1b56e-1548-4bf9-afc7-36f04b0aae4a
அழகுமிகு சூழலில் அமைந்துள்ள சில்வியாஹெம்மட் பராமரிப்பு நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்டாக்ஹோம்: சுகாதாரப் பராமரிப்பிலும் இதர புத்தாக்க நடவடிக்கைகளிலும் சிங்கப்பூருடன் கைகோத்துச் செயல்பட சுவீடன் முன்வந்துள்ளது.

சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவாக மூப்படைகிறது. அதனைக் கவனத்தில் கொண்டு, முதியோர் பராமரிப்பில் தான் பின்பற்றும் புத்தாக்க முறைகளை சிங்கப்பூருடன் பகிர்ந்துகொண்டு உதவலாம் என சுவீடன் கருதுகிறது.

சுவீடன் மன்னர் குஸ்டஃபும் அரசியார் சில்வியாவும் நவம்பர் 19 முதல் 21 வரை சிங்கப்பூருக்கு வருகை தர உள்ளனர்.

அதன் தொடர்பில் சுவீடனின் முக்கிய பகுதிகளை செய்தியாளர்கள் சுற்றிப் பார்க்க சுவீடன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பங்கேற்று அங்கு ஸ்டாக்ஹோம் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர், நினைவிழப்பு மற்றும் அறிவாற்றல் குன்றிய நோயாளிகளுக்கான ‘சில்வியாஹெம்மட் நிலையம்’ என்னும் பகல்நேர பராமரிப்பு மையத்தைச் சுற்றிப் பார்த்தார்.

நோயாளிகள் மட்டுமல்லாது அவரைப் பார்க்க வரும் உறவினர்களும் அவர்களுக்குச் சேவையாற்றும் பணியாளர்களும் அந்த மையத்தில் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள்.

நிதானமான, அழகு மிகுந்த சுற்றுச்சூழலில் நிபுணத்துவப் பராமரிப்பு அங்கு வழங்கப்படுகிறது.

ஊழியர்களிடையே வேறுபாடுகளைக் களைய, மருத்துவர்கள் சாதாரண உடையில் சேவையாற்றுகிறார்கள்.

அந்த மையத்துடன் இணைந்த சில்வியாஹெம்மட் அறநிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் 10,000 முதல் 20,000 வரையிலான அனைத்துலக சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

முதியோர் பராமரிப்புடன், மூப்படையும் மக்கள்தொகை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முறையில் அதிகரிக்கும் தேவை போன்றவற்றில் சிங்கப்பூருக்குப் பங்களிக்க சுவீடனின் பரந்து விரிந்த மருத்துவத் தொழில்நுட்பத் துறைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக, குழு விவாதம் ஒன்றில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

‘பிஸ்னஸ் சுவீடன்’ என்னும் வர்த்தக அமைப்பு நவம்பர் 11ஆம் தேதி இரண்டாவது குழு விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூரின் துவாஸ் பெருந்துறைமுகத் திட்டம், இதர எரிசக்தி இறக்குமதித் திட்டங்களுக்கும் எரிசக்தி பரிமாற்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் சுவீடன் உதவுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

மின்சார வாகனங்கள், மின்னூட்டக் கட்டமைப்பு ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வழங்கும் அளவுக்கு சுவீடன் நிறுவனங்கள் எந்த அளவுக்குச் சிறப்பான முறையில் உள்ளன என்பது அந்த விவாதத்தின்போது விளக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்