சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுனவத்தின் (எஸ்ஐஏ) குறிப்பிட்ட சில விமானச் சேவைகளில் பயணம் செய்வோருக்கு இணையத் தொடர்பு மேலும் சிறந்த வகையில் கிடைக்கவிருக்கிறது. புதிய விரிவலைச் சேவையை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதே அதற்குக் காரணம்.
ஸ்டார்லிங்க்கின் புதிய விரிவலைச் சேவை, கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திங்கட்கிழமை (மே 4) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஏர்பஸ் ஏ350-900 ரக நெடுந்தொலை விமானம், மிகவும் நெடுந்தொலைவு செல்லக்கூடிய ஏ350-900 ரக விமானம், ஏ380 ரக விமானம் ஆகியவற்றில் அடுத்த ஆண்டின் (2027) முதல் காலாண்டில் தொடங்கி 2029ஆம் ஆண்டு இறுதிவரை அந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
பயணிகள், விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கும்வரை தடையற்ற இணையத் தொடர்புச் சேவையை அனுபவிக்க முடியும் என்று ‘எஸ்ஐஏ’ தெரிவித்தது.
காணொளி ஒளிபரப்பைப் பார்த்தல், சமூக ஊடகங்களில் பதிவிடுதல், விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பெரிய அளவிலான ஆவணங்களை அனுப்புதல் முதலியவற்றைப் பயணிகள் சீராகச் செய்யமுடியும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

