வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியிருப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், ஊழியர் தங்குமிட வசதிகளும் கிருமிப்பரவல் தயார்நிலையும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு நிலையங்களை அடித்தளமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு மையத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மனிதவள அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய திரு தினேஷ், ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதால் செலவுகள் வெகுவாக அதிகரிக்கும் என்றில்லை என்றார்.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனை ஆதரிக்கும் மீள்திறன்மிக்க சுற்றுச்சூழலை உருவாக்க முதலாளிகள், தங்குவிடுதி நடத்துநர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோருடன் அரசாங்கம் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
“இந்த முயற்சிகள் பயனளித்துள்ளன. 2024ஆம் ஆண்டின் வெளிநாட்டு ஊழியர் அனுபவக் கருத்தாய்வில் 10 ஊழியர்களில் ஒன்பது பேர், சிங்கப்பூரில் தங்குவது, வசிப்பது ஆகியவற்றில் நிறைவு காண்பதாகக் குறிப்பிட்டனர். 2011ஆம் ஆண்டில் கருத்தாய்வு தொடங்கிய காலகட்டத்திலிருந்து இந்த எண்ணிக்கை மிக அதிகமானது,” என்று அவர் கூறினார்.
ஊழியர்கள் தொடர்ந்து நன்றாகவும் பாதுகாப்பாகவும் உழைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கும் தகுந்த ஓய்விடத்தை அமைப்பதன் அவசியத்தைத் துணை அமைச்சர் தினேஷ் விளக்கினார்.
ஊழியர்கள் தங்கும் வசதிக்கு இணையான முக்கியத்துவத்தை வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள் (Recreation Hub) பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொழுதுபோக்கு மையத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திரு தினேஷ், அது வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள சூன் லீ பொழுதுபோக்கு நிலையம், இத்தகைய மையமாக மேம்படுத்தப்படும் எனக் கூறினார். புதிய மையம் தற்போதைய நிலையைவிட இரண்டு, மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் வசதிகள் கூடுதலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

