பொதுமக்களை எளிதில் சென்றடைய பொதுச்சேவையில் மேம்பாடுகள்

பொதுமக்களை எளிதில் சென்றடைய பொதுச்சேவையில் மேம்பாடுகள்

2 mins read
cec251e0-e3c9-42a1-9aa8-011e9c6074e5
தோ பாயோவில் பொருள் வாங்கும் முதியோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடன்பாடுகளைச் செயல்படுத்துவது மட்டும் பொதுத்துறையின் வேலையன்று எனவும் நம்பிக்கையை வளர்ப்பதும் முக்கியப் பணி எனவும் பொதுச்சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

“தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் எனச் சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர். அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தீர்வுகளை இணைந்து உருவாக்கவும் விரும்புகின்றனர்,” என்று திரு சான் கூறினார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்திற்கு இணங்கும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகத்தின் மூலமாக அரசாங்கம், குடிமக்களுடனும் சமூகங்களுடனும் கொண்டுள்ள பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரியின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திரு சான் இவ்வாறு கூறினார்.

“இன்று, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளில் 99 விழுக்காடு மின்னிலக்க முறையில் நடைபெறுகின்றன. நேரடி உதவி தேவைப்படும் குடிமக்கள், சர்விஸ்எஸ்ஜி நிலையங்களுக்குச் செல்லலாம். அங்கு 25க்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து 600க்கும் அதிகமான சேவைகளைப் பயன்படுத்தலாம்,” என்றார் பொதுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான்.

அங் மோ கியோவில் ‘சர்விஸ்எஸ்ஜி’ நிலையம்

ஒருங்கிணைக்கப்பட்ட இந்தச் சேவைகளைப் பொதுமக்களுக்கு மேலும் கொண்டுசேர்க்க அங் மோ கியோவில் பத்தாவது சர்விஸ்எஸ்ஜி நிலையம் இவ்வாண்டு அமைக்கப்பட்டதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

பொதுச் சேவை அதிகாரிகளுக்காகக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வாழ்க்கைத்தொழில் மதிப்பீட்டு இயக்கம் குறித்த மேம்பாடுகளும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்நாள்வரை 69க்கும் அதிகமான பொது அமைப்புகளைச் சேர்ந்த 4,300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த இயக்கத்தின் அடிப்படைத் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாழ்க்கைத்தொழிலின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட ஆதரவை வழங்குவது அந்தத் திட்டத்தின் நோக்கம் என்றார் திரு சான்.

ஊழியர்களின் திறனிலும் நலனிலும் அக்கறை

பொதுத்துறையில் அறிவியல், திறன், பொறியியல் ஆகிய திறன்களை அரசாங்கம் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, பொதுத்துறை அதிகாரிகள் அனைவரும் மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்திக்கொள்வது கட்டாயம். அத்துடன், மூத்த பொதுச் சேவை அதிகாரிகளுக்கான மின்னிலக்கப் பயிற்றுவிப்பு கடந்த ஆண்டு முதல் வேகமெடுத்துள்ளது என்று அமைச்சர் சான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்