தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவர்களின் கற்றல் மேம்பாடு

2 mins read
1e48991d-1b73-407b-95a5-1aee1882f775
திங்கட்கிழமை (ஜூன் 30) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விளக்கக் காட்சி. - படம்: சாவ் பாவ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பலருக்கும் கைகொடுத்து வருகிறது. அப்படி அதனைப் பயன்படுத்தி, பயன்பெற்று வருவோரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் நாத் சோஹம். 

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு வணிகப் பகுப்பாய்வு பயின்றுவரும் நாத், அக்கல்வி நிலையம் அறிமுகம் செய்துள்ள ‘ஐஸ்மார்ட்கைட்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவி மூலம் பெரிதும் பயனடைந்து வருகிறார்.

கல்வியைத் தான் அணுகும் முறையை அக்கருவி மாற்றி அமைத்துள்ளதாகப் பகிர்ந்துகொண்ட நாத், அது விரிவான ஒரு கற்றல் தளமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயன்படுத்தியதன் மூலம் தனது தன்னம்பிக்கையும் கூடியதாகக் கூறிய நாத், செயற்கை நுண்ணறிவும் ஒருவரின் அறிவாற்றலும் சேரும்போது ஒருவரின் கற்றல் அனுபவம் மேம்படும் என்பதையும் அறிந்துகொண்டதாகச் சொன்னார்.

வரும் ஜூலை மாதத்திலிருந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து இளங்கலைப் பாடங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இக்கருவி செயல்படும்.

இத்தகைய அணுகுமுறையைக் கொண்டுவர சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் முதல் உள்ளூர்ப் பல்கலைக்கழகம் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழக வளாகத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்கு அக்கருவியின் அம்சங்கள் குறித்த விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.

கற்றல் சேவைகளுக்கான துணைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான லீ வி லியோங் கருவியைப் பற்றி மேலும் விளக்கினார். மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் செயற்கை நுண்ணறிவு கருவியில் மாணவர்கள் தேடும் தகவல்களுக்கு அப்பாற்பட்டு கேள்வி பதில் அங்கமும் அடங்கியுள்ளது.

மாணவர்களுக்காக நிர்வகிக்கப்பட்ட தகவல்கள் நிறைந்துள்ள இந்தக் கருவியில் 10,000க்கும் மேற்பட்ட கற்றல் வளங்கள் உள்ளன. மாணவர்கள் அவர்களின் பாடங்களுக்கு அப்பாற்பட்டு இதர பாடங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் நோக்கில் இந்தக் கருவியில் ஒருவர் பேசுவதைச் சொற்களாக மாற்றும் அம்சம் உள்ளது.

கேள்வி பதில் அங்கத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட நாத், தனது பொது அறிவு சோதிக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், பாடங்களின் உள்ளடக்கம் அந்தக் கருவியில் சுருக்கிக் கூறப்படுவதும் தனக்கு உதவியாக இருந்ததாக சொன்னார்.

மாணவர்கள் இந்தக் கருவி மூலம் ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தும் கற்றுக்கொள்ளலாம்.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் வாழ்நாள் கற்றலுக்குத் துணைபுரியும் வகையில் இந்தக் கருவியைப் பயன்படுத்த முடியும். 

குறிப்புச் சொற்கள்