சிறந்து விளங்கிய சமூக நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

3 mins read
fb64940a-d7f0-4417-87ed-11837c904339
சிறப்பு விருந்தினர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் சிங்கப்பூர்ச் சமூக நிறுவன மையக் கட்டமைப்பின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 17 நிறுவனப் பிரதிநிதிகள். - படம்: சிங்கப்பூர்ச் சமூக நிறுவன மையம்

சிங்கப்பூர்ச் சமூக நிறுவன மையக் (Singapore Centre for Social Enterprise) கட்டமைப்பின்கீழ் 17 நிறுவனங்கள் சிங்கப்பூரின் முன்னணிச் சமூக நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சமூகத் தாக்கம், சிறந்த நிர்வாகம், வர்த்தக ரீதியான நிலைத்தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. ‘அமேசிங் ஸ்பீச் தெரபி’, ‘பெட்டர் குரூப்’, ‘நேனி புரோ’ உள்ளிட்ட நிறுவனங்கள் அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூர்ச் சமூக நிறுவன மையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இது அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) கரையோரப் பூந்தோட்டங்கள் வளாகத்தில் நடைபெற்றது. அதில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஏறத்தாழ 82 நிறுவனங்கள் தங்களின் சேவைகளைக் காட்சிப்படுத்தின. இக்கண்காட்சி, சமூக நிறுவனங்கள், நிதி நிலைத்தன்மை, சமூக நோக்கங்களை முன்னிறுத்திய வர்த்தகங்களின்வழி தேசிய முன்னுரிமைகளுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டியது.

‘ஒரு தேசம், பணியில் பேரார்வம்’ (A Nation, Heart at Work) எனும் கருப்பொருளுடன் கூடிய இக்கண்காட்சி ஐந்து முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிங்கப்பூர்ச் சமூக நிலப்பரப்பின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்க ஏதுவாக, புத்தாக்கத்தையும் நீண்டகாலச் செயல்பாடுகளையும் வளர்க்கும் நோக்கில் இரு உத்திபூர்வப் பிரிவுகள் அறிமுகம் கண்டன.

அதன் ஓர் அங்கமாக, சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய சமூக சேவை மன்றத்துடன் இணைந்து, புத்தாக்கச் சோதனைக் களத் திட்டம் (Innovation Sandbox Programme) 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது, சமூகத் தாக்கம் கொண்ட புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பான சோதனைத் தளமாக விளங்கும். ஒரு மில்லியன் வெள்ளி நிதி உதவியுடன் சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து புதிய தீர்வுகளை உருவாக்கிச் சோதனை செய்ய இது வழிவகுக்கும்.

இரண்டாவது அம்சமாக, நிதி நெருக்கடியில் இருக்கும் சமூக நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மானியங்களையும் முதலீடுகளையும் இணைக்கும் ‘கலப்பு நிதி; ஊக்க மூலதனம்’ (Blended Finance and Catalytic Capital) முறை அறிமுகம் காணவுள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 மில்லியன் வெள்ளி முதலீட்டைத் திரட்டி, நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து நின்று வளர தேவையான நிதி ஆதாரத்தை உறுதிசெய்யும்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, “இவ்வமைப்பானது வணிகங்கள் லாபகரமாக இயங்குவதுடன், சமூகத்திற்கு நன்மையும் செய்ய முடியும் எனும் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், நாட்டின் பொருளியலையும் வலுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன,” என்றார்.

சிங்கப்பூரில் சிறப்பாகச் செயல்படும் சமூக நிறுவனங்கள், எல்லைகள் கடந்து அண்டை நாடுகளுக்கும் தங்களின் சேவைகளையும் புத்தாக்கங்களையும் கொண்டு செல்ல வேண்டுமென்று அமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து, அதிகரித்துவரும், சிக்கலான தேவைகளை எதிர்கொள்ளப் புதிய நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமூக நிறுவனங்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்களுடனும் புரவலர்களுடனும் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசியச் சமூகச் சேவை மன்றம், சமூக நிறுவனச் சங்கம், பந்தயப்பிடிப்புக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்பில் சிங்கப்பூர்ச் சமூக நிறுவன மையம் உருவானது. கடந்த பத்தாண்டுகளில் 820க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் இணைந்தன; அவற்றின் மொத்த வருவாய் 230 மில்லியன் வெள்ளியை எட்டியது.

சிங்கப்பூரில் ஒரு துடிப்பான சமூக நிறுவனச்சூழலை வடிவமைக்க இவ்வமைப்பு உதவியுள்ளதாக அமைப்பின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி சுபா‌ஷினி பாலகிரு‌ஷ்ணன் கூறினார்.

“முதன்முறையாக முன்னணிச் சமூக நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வமைப்பு பங்காளித்துவத்தை வளர்ப்பதுடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புத்தாக்கத்துடன் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும்,” என்றார் திருவாட்டி சுபாஷினி.

குறிப்புச் சொற்கள்