ஒன்பது மாதங்களாகத் தாம் உருவாக்கி வந்த கொள்கைப் பரிந்துரைகளைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் முன்வைக்கும் வாய்ப்பை 120 இளையர்களுக்கு வழங்கியது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவோடு தேசிய இளையர் மன்றம் நடத்திய முதல் இளையர் கொள்கை மாநாடு. அதில் ஏறத்தாழ 1,000 இளையர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி மரினா பே மாநாட்டு, கண்காட்சி மையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது.
பொருளியல் மீள்திறன், தென்கிழக்காசியாவில் வேலைவாய்ப்புகள், மின்னிலக்க நலம், மறுசுழற்சி ஆகிய நான்கு கூறுகளைச் சார்ந்து இளையர்களின் பரிந்துரைகள் அமைந்தன.
நிகழ்ச்சியின் தொடக்க அங்கமாக, ‘சிங்கப்பூரை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்வது’ என்ற கலந்துரையாடல் பிரதமர் வோங்குடன் நடைபெற்றது.
வலுவான எதிர்காலத்தில் இளையர்களின் பங்கு: பிரதமர் வோங்
மறுமலர்ச்சியடைந்த சிங்கப்பூர்க் கனவை நோக்கிய பயணத்தில், இளையர்கள் என்ன சாதிக்க விரும்புகின்றனர், அதனால் நாட்டிற்கு என்ன பயன் விளையும் என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்றார் பிரதமர் வோங்.
“தனிநபர் அளவில், ஒவ்வொருவரும் தாம் விரும்பிய துறைகளில் திறன்களை முழுமையாக வளர்க்கும் சுதந்திரத்தைப் பெறவேண்டும். நீங்கள் வெற்றிக்காக உழைத்தால், எத்துறையாக இருந்தாலும் அரசாங்கம் ஆதரவளிக்கும்.
“அதே சமயம், பிறரை வெற்றியடையச் செய்வதும் நம் மனதில் இருக்கவேண்டும். அதனால், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்காற்ற இளையர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்த விரும்புகிறோம். அவ்வகையில் எழுந்ததுதான் இம்மாநாடு,” என்றார் பிரதமர் வோங்.
இளையர்கள் முன்வைத்த பரிந்துரைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராயும் என்றும் அதனால்தான் ஒவ்வொரு தலைப்புக்கும் தொடர்பான அமைச்சுகளும் அரசாங்க அமைப்புகளும் இத்திட்டத்தில் ஈடுபடுகின்றன என்றும் கூறினார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
“சாத்தியமான பரிந்துரைகளை நாங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். யோசனைகள் வழங்குவதோடு மட்டுமன்றி அவற்றைச் செயல்படுத்தவும் நீங்கள் நாட்டம் கொண்டால் அதிலும் உங்களை ஈடுபடுத்துவோம்.
“என்றாலும், அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியாகக் கூறமுடியாது. சில யோசனைகள் மிகச் சிறந்தவையாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்குத் தேவைப்படும் வளங்கள் இப்போது இல்லாமல் இருக்கலாம், எதிர்காலத்தில் அவற்றைச் செயல்படுத்தலாம்.
“அதனால், எத்தனை பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை வைத்து உங்கள் குழுக்களை மதிப்பிடாதீர்கள்,” என வலியுறுத்தினார் பிரதமர் வோங்.
பிரதமர் வோங்குடனான கலந்துரையாடலை அடுத்து, பார்வையாளர்களிடம் இளையர் குழுக்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைத்து அவர்களது கருத்துகளையும் பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவு அங்கமாக, சமூகச் செயல்பாட்டுக்கு மறுமலர்ச்சியளிப்பதில் இளையர்களின் பங்கு பற்றி கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் கலந்துரையாடினார்.
மாநாட்டையும் தாண்டி, இளையரின் பரிந்துரைகள் nyc.gov.sg/youthpanels இணையத்தளத்தில் செப்டம்பர் 15 வரை இருக்கும். சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகளை வழங்கலாம்.
இதன்மூலம் இளையர்கள் தங்கள் பரிந்துரைகளை சீர்செய்து, தகுந்த அரசாங்க அமைப்புகளிடம் அனுப்புவர். அவை 2025ன் முற்பகுதிக்குள் பரிந்துரைகளை ஆராய்ந்து பதிலளிக்கும்.
“சமூக ஊடகங்களும் அவற்றினாலான பிரச்சினைகளும் நாளுக்கு நாள் மாறிவருகின்றன. அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதனால்தான் நாங்கள் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இளையர்களுக்கும் இடையே கலந்துரையாடல்களை அதிகரிக்க முன்மொழிந்தோம்,” என்றார் இத்திட்டத்தின் தொழில்நுட்ப இளையர்க் குழு உறுப்பினர் நந்தினி பாலகிருஷ்ணன், 30.
“இளையர்களுக்கு ஆசியான் வேலைப் பயிற்சிகளை வழங்கி, பாடத்திட்டத்தில் ஆசியான் மொழிகள், கலாசாரம் போன்றவற்றை புகுத்தி, தென்கிழக்காசிய வேலைவாய்ப்புகளுக்குப் பயிரிட நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் நைய்லா சைரில், 19.
“இன்றைய சிங்கப்பூர்க் கனவு, ஒரு தலைமுறைக்கு முந்தைய கனவோடு ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டது. முன்பு படிப்பு, வேலை, ஓய்வு என்றுதான் இருந்தது. ஆனால் இன்று ஐந்துமுறைகூட வேலை மாறக்கூடும். அதனால், மாறிவரும் சூழல்களுக்கேற்ப இளையரின் கருத்துகளையும் அரசாங்கம் கொள்கைகளில் சேர்ப்பது மிகச் சிறந்தது,” என்றார் பார்வையாளர் ஹுசைஃபா ஷகீர், 35.
பரிந்துரைகள்
இளையர்களிடையே நிதி அறிவையும் மீள்திறனையும் வளர்க்க ‘நிதியறிவில் உன்னதம்’ வழிகாட்டியை உருவாக்க ஒரு குழு ஆலோசிக்கிறது. அதே குழு, குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கான சேமிப்புத் திட்டத்தையும் முன்மொழிகிறது.
மற்றொரு குழு, தென்கிழக்காசியாவில் 35 வயதுக்கு உட்பட்ட இளம் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தேடித் தர விழைகிறது. இதற்காக பாடத்திட்டத்தில் ஆசியான் குறித்த தகவல்களை ஒன்றிணைப்பது, ஆசியான் வேலைப் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவது, இளையர்களை வெளிநாட்டு சிங்கப்பூரர்களுடன் இணைப்பது போன்றவற்றை பரிந்துரைக்கிறது.
மூன்றாவது குழு, இணையத் தீங்குகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை இளையர்களுக்கு உணர்த்த ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் இளையர்களிடத்தில் இது குறித்த வருடாந்திர கருத்துக்கணிப்பை நடத்தவும் ஆலோசிக்கிறது.
நான்காவது குழு, மறுசுழற்சியில் தற்போதுள்ள 40 விழுக்காட்டு மாசுபடும் விகிதத்தைக் குறைக்க, மறுசுழற்சி விளக்கச்சீட்டுகளைப் பரந்த அளவில் எளிமையாக்கவும் தரப்படுத்தவும் ஆலோசிக்கிறது. மறுசுழற்சியை சீராக்க, பிரிவுகள் கொண்ட மறுசுழற்சித் தொட்டிகளை அறிமுகப்படுத்தவும் அது பரிந்துரைக்கிறது.
ஒன்பது மாத உழைப்பின் பலன்
இளையர்க் குழுக்களின் பயணம் சென்ற நவம்பரில் தொடங்கியது. அவர்கள் கொள்கை உருவாக்குதல், புத்தாக்கமாகத் தீர்வுகாணுதல் போன்ற பயிலரங்குகளில் பங்கேற்றனர்.
இவ்வாண்டு மே முதல் ஜூலை வரை, அரசாங்க அமைப்புகளின் ஆதரவோடு பயிலரங்குகள், கற்றல் பயணங்கள், ஆய்வுகள் போன்றவற்றில் அவர்கள் கலந்துகொண்டனர். இளையர்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்பினருடன் 30க்கும் மேற்பட்ட குழுக் கலந்துரையாடல்களையும் ஏறக்குறைய 4,000 இளையர்களுடனான கருத்துக்கணிப்புகளையும் அவர்கள் நடத்தினர்.
இளையரின் கருத்துகள்
“இப்பரிந்துரைகள் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வையும் பாதிக்கக்கூடியவை. மேலும், பிரதமருடனான கலந்துரையாடலில் பல முக்கியக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
“உதாரணத்திற்கு, நான் பட்டக்கல்வியை முடித்த பின்னரும் எவ்வளவு அடிக்கடி என் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்? அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற தகவல்களைப் பற்றி அறிந்தேன்,” என்றார் ஹுசைஃபா ஷகீர், 35.

