இலகுரக மின் கனரக வாகனங்களுக்கான ஊக்கத்தொகை $15,000 ஆகக் குறைப்பு

இலகுரக மின் கனரக வாகனங்களுக்கான ஊக்கத்தொகை $15,000 ஆகக் குறைப்பு

2 mins read
48243531-d0c0-4924-864f-12a48f466ae3
இந்த மாற்றம் 3,500 கிலோகிராம் முதல் 7,000 கிலோகிராம் வரை எடை கொண்ட வாகனங்களுக்குப் பொருந்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இலகுரக மின் கனரக சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கு வழங்கப்படும் ரொக்க ஊக்கத்தொகை செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 40,000 வெள்ளியிலிருந்து 15,000 வெள்ளியாகக் குறைக்கப்படுகிறது.

இந்த மாற்றம் 3,500 கிலோகிராம் முதல் 7,000 கிலோகிராம் வரை எடை கொண்ட வாகனங்களுக்குப் பொருந்தும்.

இந்தப் பிரிவில் பிஒய்டி டி35, மிட்சுபிஷி ஃபியூசோ இ-கேன்டர் போன்ற வர்த்தக விநியோக லாரிகளும் அடங்கும்.

“மின்வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதும் அவற்றுக்கும் சாதாரண டீசல் வாகனங்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் குறைந்து வருவதுமே மானியக் குறைப்புக்குக் காரணம்,” என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இந்தத் திட்டம் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மின் கனரக வாகனங்களின் பயன்பாடு துரிதமாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட இலகுரக கனரக வாகனங்களில் 55 விழுக்காடு மின்வாகனங்களாகும். ஒட்டுமொத்தமாக, அந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கனரக வாகனங்களில் 30 விழுக்காடு மின்சார வாகனங்களாகும்.

ஜூலை மாத இறுதியில் எடுக்கப்பட்ட தரவுகள்படி சிங்கப்பூரில் 8,777 மின் கனரக வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. இது ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்கள், பேருந்துகளில் 5.5 விழுக்காடாகும். கடந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 7,188 ஆக இருந்தது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாகன உரிமைச் சான்றிதழ் ஏலக் குத்தகையிலிருந்து தகுதிபெறும் வாகனங்களுக்கு 15,000 வெள்ளியிலான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

இந்நிலையில், 7,000 கிலோகிராமுக்கு மேல் எடையுள்ள கனரக வாகனங்களுக்குத் தொடர்ந்து 40,000 வெள்ளி ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏனெனில் அத்தகைய மின்வாகனங்களின் விலை டீசல் வாகனங்களைவிட அதிகமாக உள்ளது.

சிங்கப்பூரின் கரியமில வாயு குறைப்பு இலக்குகளுக்குப் பங்களிப்பதற்காக இத்திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இது 2028ஆம் ஆண்டு டிசம்பர் வரை செயல்படும்.

குறிப்புச் சொற்கள்