பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்; $102 மி. இழப்பீடு வழங்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
78d3427e-0ece-41a2-8a89-225f5c3bbb76
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பாலத்தின்மீது‘டாலி’ என்ற சரக்கு கப்பல் மோதியது.  - படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பாலத்தை ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் கடந்த மார்ச் மாதம் மோதியது. அதில் பாலம் இடிந்து விழுந்தது.

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நீதித்துறை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், கப்பலின் உரிமையாளரும் நிர்வாகமும் இழப்பீடாக 102 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

“பாலம் இடிந்த சம்பவம் மோசமான போக்குவரத்துப் பேரழிவுகளில் ஒன்று. இதில் 6 பேர் மாண்டனர்; அளவிட முடியாத அளவு பொருளியல் இழப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு இழப்பீடு குறித்து ஒரு முடிவு எட்டப்பட்டது ஒரு நல்ல முன்னேற்றம்,” என்று நீதித்துறையின் மூத்த அதிகாரி பெஞ்சமின் மைசர் தெரிவித்தார்.

பால்டிமோர் பாலத்தின்மீது மோதிய கப்பல் உரிமையாளர் கிரேஸ் ஓ‌ஷியா பிரைவெட் லிமிடெட். கப்பலை இயக்கும் நிர்வாக பொறுப்பில் சினர்ஜி மரின் குழுமம் உள்ளது. இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டவை.

பாலம் இடிந்தபோது மீட்புப் பணிகள், நீருக்கடியில் சிதைவுகளைச் சுத்தம் செய்வது, பல வாரங்களாக மூடிக்கிடந்த துறைமுகத்தை மீண்டும் திறந்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டது. அதற்காக செய்யப்பட்ட செலவை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற அந்நாட்டு நீதித்துறை வழக்கு தொடுத்தது.

இழப்பீடாக வழங்கப்படும் தொகை பாலத்தின் கட்டுமானத்துடன் தொடர்பு இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். அதை மேரிலேண்ட் மாநிலம் மற்றோர் வழக்கு மூலம் பெற திட்டமிட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திய கப்பலில் மின் மற்றும் இயந்திர கட்டமைப்புகள் சரியாகப் பாரமரிக்கப்படவில்லை. அது கப்பலின் மின் இணைப்பை பாதித்தது. அதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின்மீது மோதியது என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கப்பல் பால்டிமோரில் இருந்து இலங்கைக்கு சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிக்ழந்தது.

குறிப்புச் சொற்கள்