கூட்டுரிமை வீட்டின் மாடத்திலிருந்து கான்கிரீட் விழுந்த சம்பவம்: கட்டட மேம்பாட்டாளர் மீது வழக்கு

கூட்டுரிமை வீட்டின் மாடத்திலிருந்து கான்கிரீட் விழுந்த சம்பவம்: கட்டட மேம்பாட்டாளர் மீது வழக்கு

2 mins read
b0e3cd32-efe0-4f83-8721-df74137ac539
பெட்டிர் ரோட்டில் அமைந்துள்ள ‘ஃபோரெஸ்க் ரெசிடென்சஸ்’ கூட்டுரிமை வீடமைப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள கூட்டுரிமை வீடமைப்பு ஒன்றின் மாடத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரத்திலிருந்து கான்கிரீட் துண்டு கீழே விழுந்ததன் தொடர்பில் அதன் மேம்பாட்டாளர் வின்சியர் இன்வெஸ்ட்மென்ட் மீதும் சம்பந்தப்பட்ட மற்றத் தரப்பினர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. ஒரு புளோக்கில் உள்ள 60 விழுக்காட்டு மாடங்களின் ஓரப்பகுதிகளைச் சோதித்தபோது உள்ளே ஒன்றும் இல்லாததைப் போன்ற ஒலி கேட்டதாகக் கூறப்பட்டது.

கட்டட மேம்பாட்டாளர், கட்டடக் கலைஞர், கட்டுமானப் பொறியாளர், கைப்பிடிச் சுவர்ப் பொறியாளர், துணை ஒப்பந்ததாரர் ஆகிய அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்களுக்கு அதில் பொறுப்பில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாகத் தங்கள் தற்காப்பு வாதத்தைத் தாக்கல் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ‘ஃபோரெஸ்க் ரெசிடென்சஸ்’ எனும் கூட்டுரிமை வீடமைப்பு பெட்டிர் ரோட்டில் அமைந்துள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக்காலத்தைக் கொண்ட அது 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தற்காலிகமாகக் குடியேறுவதற்கான அனுமதியைப் பெற்றது. இதில் ஐந்து புளோக்குகளும் 496 வீடுகளும் உள்ளன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, புளோக் 105ன் மூன்றாவது தளத்தில் உள்ள மாடத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து சிமென்ட் பூச்சு ஒன்று கழன்று முதல் தளத்தில் உள்ள வீட்டின்மீது விழுந்தது.

சம்பவம் குறித்துக் கட்டட, கட்டுமான ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால், இப்போது அதுகுறித்துக் கருத்துக்கூற இயலாது என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஆணையம் அன்றைய தினமே சம்பவ இடத்தை ஆய்வு செய்து, உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் நிரந்தரச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கூட்டுரிமை வீடமைப்பின் மேலாண்மைக் குழுவுக்கு அறிக்கை அனுப்பியது.

இதன் காரணத்தைக் கண்டறியவும் பிற பகுதிகளில் இதுபோன்ற ஆபத்துகள் உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கவும் ‘காஸ்டெல்லோ கன்சல்டன்ட்’ நிறுவனத்தின் தொழில்முறைப் பொறியாளர் சான் சீ சூனை ஃபோரெஸ்க் ரெசிடென்சசின் மேலாண்மைக் குழு நியமித்தது. புளோக் 105ஐ ஆய்வு செய்த சான், மாடத்தின் ஒரு பகுதி திட்டமிட்டபடி கட்டப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். கான்கிரீட்டின் 70 மில்லிமீட்டர் பகுதி விடுபட்டிருந்ததாகவும் அந்த இடைவெளி பின்னர் சிமென்ட் கலவையால் நிரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வடிவமைப்பில் செய்யப்பட்ட இந்த மாற்றம், கான்கிரீட்டிலிருந்து பிரிந்து விழக்கூடிய பலவீனமான பகுதியை உருவாக்கியதாகச் சான் கூறினார்.

சுத்தியல் சோதனையின்போது புளோக் 105ன் மாடத்தின் விளிம்புகளில் ஏறக்குறைய 60 விழுக்காட்டுப் பகுதிகளில் வெற்றுச் சத்தம் கேட்டது தெரியவந்தது. இது மோசமான பிணைப்பையும் கான்கிரீட்டிலிருந்து சிமென்ட் பகுதி பிரிவதற்குரிய சாத்தியத்தையும் குறிப்பதாகச் சான் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
கூட்டுரிமைவீடுகள்புக்கிட் பாஞ்சாங்கட்டடம்