கலவரம் தொடர்பான குற்றங்களுக்காக 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சிறுவர்களைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
ஒரு சிறுவனைத் துன்புறுத்தும் விதமாக அவனது தொண்டைப் பகுதியில் மற்றொரு சிறுவன் கத்தியை வைத்து மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.
அந்தச் சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்கு காவல்துறை பதிலளித்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 13 வயது மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள்மீது, காயம் ஏற்படுத்தியதாக ஜூலை 16ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டதாக அந்தப் பதிலில் காவல்துறை குறிப்பிட்டது.
பொது இடத்தில் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக 15 வயதுச் சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் ஜூலை 6ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஜூலை 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத் தளம் ஒன்றில் ஜூலை 23ஆம் தேதி பதிவேற்றப்பட்டது.
சிறுவனின் தொண்டைப் பகுதியில் மற்றொரு சிறுவன் கத்தியை வைத்து அழுத்திய பின்னர் உண்மையைச் சொல்லுமாறு கேட்டது காணொளியில் பதிவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தான் பொய் சொல்லவில்லை என்று சிறுவன் பதில்கூறுவதும் அதனைக் கேட்டு அவனது முகத்தில் மற்றொரு சிறுவன் பலமாக அறைவதும் காணொளியில் தெரிந்தது.
எதற்காக அந்தச் சண்டை மூண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.