2023ஆம் ஆண்டில் பொதுத் துறையில் தரவுக் கசிவு சம்பவங்கள் 10%, அதாவது 201ஆக உயர்ந்துள்ளன.
இதற்கு மின்னிலக்க சேவைகளின் அதிகரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஜூலை 30ஆம் தேதி தெரிவித்தது.
அவற்றில் பெரும்பாலான, அதாவது 172 சம்பவங்கள், குறைந்த தீவிரத்தன்மை கொண்டவை என்றும் அமைப்புகள், தனிநபர்கள் அல்லது வர்த்தகங்கள் மீது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தின என்றும் அமைச்சு, அரசாங்கத்தின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய தனது வருடாந்தர அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
2021ஆம் ஆண்டு 126 எனக் குறைந்த தீவிர சம்பவங்கள், அது முதல் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடிய மிதமான தீவிர சம்பவங்கள், 2022ஆம் ஆண்டில் 46 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, 2023ல் 29ஆகக் குறைந்துள்ளது.
படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொதுத் துறையில் தரவுப் பாதுகாப்பு குறித்த அதிக விழிப்புணர்வுமே இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அமைச்சு விவரித்தது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அதிக, கடுமையானவை அல்லது மிகக் கடுமையானவை என வகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இந்தச் சம்பவங்கள், தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைத்தல், அல்லது நிதி அல்லது உணர்வுபூர்வமான சேதம், மரணம், அல்லது கடுமையான காயம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
2018ல் இரண்டு சம்பவங்கள் மட்டுமே கடுமையானவை என வகைப்படுத்தப்பட்டன.
சுகாதார அமைச்சின் எச்ஐவி (HIV) பதிவேட்டில் இருந்து 14,200 நோயாளிகளின் ரகசியத் தகவல்கள் கசிந்தன. மேலும் 223 வழக்குக் கோப்புகள் அரசு நீதிமன்றத்தின் இணைய அமைப்பிலிருந்து அனுமதியின்றி எடுக்கப்பட்டன.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் வருடாந்தர அறிக்கையில், தரவுச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் பாதுகாப்பையும் மேம்படுத்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இது, பொறுப்பேற்றுக் கொள்ளுதலையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான பொதுத்துறை தரவுப் பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவின் முக்கிய முயற்சியாகும்.
ஜூன் 2018ல் 1.5 மில்லியன் சிங்ஹெல்த் நோயாளிகளின் தரவு ஊடுருவலை உள்ளடக்கிய சிங்கப்பூரின் மோசமான தரவு ஊடுருவல் நிகழ்ந்தது.
இந்த உயர்தர இணையப் பாதுகாப்பு ஊடுருவல்களுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டது.
பொதுத்துறை அமைப்புகள், 2020க்கும் 2024க்கும் இடையில், மறுஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து 24 திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்தியுள்ளன என்றும் அமைச்சு விளக்கியது.
இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், தரவுச் சம்பவங்களைத் திறம்பட கண்டறிந்து பதில் நடவடிக்கைகள் எடுக்கும் செயல்முறைகள், தரவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை குழுவின் பரிந்துரைகளில் அடங்கும்.
2024 மார்ச் முதல், இனி தேவைப்படாத அரசாங்கப் பயனர் கணக்குகள், மத்திய கணக்கு மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக தானாகவே அகற்றப்படும்.
இதன் மூலம், முன்னாள் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத அனுமதி அல்லது தீங்கிழைக்கும் நபர்களால் ஊடுருவும் அபாயம் குறைக்கப்படும்.
தனது தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த புதிய திறன்களைத் தேடவும் அவற்றைப் புதுப்பித்து வைத்திருக்கவும் அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமைச்சு மதிப்பாய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.