வாழ்க்கைத்துணை, மூத்தோர் வன்முறைச் சம்பவங்கள் கூடின

2 mins read
be95ccdc-fe13-4e08-bba5-7100430a385c
வாழ்க்கைத்துணை வன்முறைச் சம்பவங்களில் கணிசமான விகிதம் குடும்பச் சேவை நிலையங்களால் கையாளப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாழ்க்கைத்துணை, மூத்தோர் வன்முறைச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டில் அதிகம் பதிவாகியுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 10) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டிலிருந்து அது ஏறுமுகமாக உள்ளது. அதற்கு மூப்படைந்துவரும் சமூகம், அதிக விழிப்புணர்வு, பலரும் முன்வந்து புகாரளிப்பது போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்றும் அமைச்சு கருதுகிறது.

2023ஆம் ஆண்டில் 2,008 ஆக இருந்த வாழ்க்கைத் துணை துன்புறுத்தல் தொடர்பான புதிய சம்பவங்கள் 2024ல் 2136 ஆகி, 6 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மூத்தோர் மீதான புதிய நிலை 1 துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பெரியவர்களுக்கான நிலை 2 சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளது. அத்தகைய மூத்த குடிமக்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்களுக்குப் புறக்கணிப்பு முக்கியக் காரணமாக விளங்குகிறது

2023ல் 297 ஆக இருந்த மூத்தோர் துன்புறுத்தல் தொடர்பான புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 2024ல் 359 ஆக உயர்ந்துள்ளது. அவை சமூக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் குறைந்த, மிதமான இடர் கொண்டவை.

புதிய வாழ்க்கைத்துணை துன்புறுத்தல் சம்பவங்கள், நிலை 1 மூத்தோர் வன்முறைச் சம்பவங்கள், நிலை 2 எளிதில் பாதிக்கப்படும் நிலை உள்ள மூத்தோர் துன்புறுத்தல் சம்பவங்கள், எளிதில் பாதிக்கப்படும் நிலை உள்ள பெரியவர்கள் புறக்கணிக்கப்படும் சம்பவங்கள் இவ்வாண்டு முற்பாதியில் அதிகமாகப் பதிவாயின.

வாழ்க்கைத்துணை வன்முறைச் சம்பவங்களில் கணிசமான விகிதம் குடும்பச் சேவை நிலையங்களால் கையாளப்படுகின்றன.

அதில் பெரும்பாலும் சுயபரிந்துரைகள் என்பது பாதிக்கப்பட்டோர் முன்வந்து உதவி கோருவதைக் காட்டுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களை உள்ளடக்கிய மூத்தோர் வன்முறைச் சம்பவங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் நம்பும் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளரால் ஏற்படுகிறது.

இந்தச் சம்பவங்களில் அதிக அளவிலான பராமரிப்பு அழுத்தத்தை அனுபவிக்கும் குடும்பங்கள் அடங்கியுள்ளன.

சென்ற ஆண்டு நேர்ந்த சம்பவங்களைப் பொறுத்தமட்டில், பாலியல், உணர்வுசார், உளவியல் வன்முறை, புறக்கணிப்பு போன்ற பிற வகைகளுடன் ஒப்பிடுகையில், உடல்சார்ந்த வன்முறை மிகவும் பொதுவான, முதன்மையான வன்முறை வகையாக இருந்தது.

“குறைவான ஆண்கள் உதவி நாடியிருப்பதால் ஆண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என்று அர்த்தமல்ல. அவமானம் அல்லது சமூகப் பார்வை காரணமாக சிலர் தங்கள் அனுபவங்களை உணர்வது அல்லது பேசுவது கடினமாக இருக்கலாம்” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்