‘இன்கம் இன்ஷுரன்ஸ்’ நிறுவனத்தின் பெரும்பங்கு ஜெர்மானிய காப்புறுதி நிறுவனமான அலையன்சிடம் (Allianz) விற்கப்பட்டாலும், என்டியுசி என்டர்பிரைஸ் நிறுவனம் அதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதன் தலைவர் லிம் பூன் ஹெங் கூறியுள்ளார்.
குறைந்த வருமான வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற விலைக் கட்டுப்படியான, எளிதில் பெறக்கூடிய காப்புறுதித் தெரிவுகளை இன்கம் தொடர்ந்து வழங்கும் என வியாழக்கிழமை (ஜூலை 25) திரு லிம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மத்திய சேமநிதிக் கழகத்துடனான பங்காளித்துவ முயற்சியுடன் தேசிய அளவிலான காப்புறுதித் திட்டங்களில் இன்கம் தொடர்ந்து பங்குபெறும் எனக் கூறிய அவர், இன்கமின் காப்புறுதித் திட்டங்கள் “மிகவும் போட்டித்தன்மையுடைய” விலையில் விற்கப்படும் என்றார்.
இன்கம் நன்கு போட்டியிட உதவவே அலையன்ஸ் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
இங்குள்ள தொழிலாளர் இயக்கம், இன்கம் நிறுவனத்தின் தொழிலுக்காக பல ஆண்டுகளாக நிதி வழங்கி வந்துள்ளதை திரு லிம் சுட்டினார்.
இன்கம் வெளியிட்ட வேறோர் அறிக்கையில், என்டியுசி என்டர்பிரைஸ் இன்கம் நிறுவனத்துக்கும் அதன் பங்குதாரர்களுக்கு தொடர்ந்து உறுதியான கடப்பாடு கொண்டிருக்கும் எனக் கூறியது.

