கரிம வரி ஏற்றத்தைச் சமாளிக்கும் விதமாக சிங்கப்பூரில் இவ்வாண்டு மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
இதன் விவரங்களை அரசாங்கப் பேச்சாளர் புதன்கிழமை (ஜனவரி 21) தெரிவித்தார்.
சராசரியாக ஓரு நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் ஒரு மாத மொத்த மின்சார, எரிவாயுக் கட்டணம் பொருள் சேவை வரி உள்படாமல் (ஜிஎஸ்டி) $3 அதிகரிக்கும்.
சிங்கப்பூரின் கரிமவரி கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, ஒரு டன்னுக்கு $45 உயர்ந்துள்ளது. குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கம் சலுகைகள் வழங்கி ஏற்றம் காணும் பொது பயனீட்டுச் செலவையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
அரசாங்கம் யு-சேவ் எனப்படும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளை மக்களுக்கு வழங்கும்.
வர்த்தகத் தேவைகளையும் வெளிப்படைத் தன்மையையும் சமநிலைப்படுத்த சில நிறுவனங்கள், கரிம வரியிலிருந்து விலக்கு பெறுகின்றன. அவற்றின் ஒருங்கிணைந்த சலுகைகள் சார்ந்த தரவுகளை அரசாங்கம் 2027ஆம் ஆண்டு வெளியிடும்.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் வெளியேற்றப்படும் வாயுக்களுக்கு விதிக்கப்படுவதே கரிம வரியாகும்.
எரிபொருள் விலை தற்போது சற்று தணிந்துள்ளதால் மார்ச் மாதம் வரையில் குடியிருப்புகள் மின்சாரத்துக்கும் எரிவாயுவுக்கும் அரசாங்கச் சலுகைகளுக்குப்பின், குறைவாகவே கட்டணம் செலுத்துவர்.
தொடர்புடைய செய்திகள்
இதர சந்தை நிலவரங்களைப் பொறுத்து முதல் காலாண்டில் வரிகள் ஒரே நிலையில் இருந்தால் பொருள் சேவை வரி தவிர்த்து இது சாத்தியப்படும்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் எரிசக்திக்கான கட்டணத் தளர்வு, கரிம வரியை ஓரளவு ஈடுசெய்ய உதவியுள்ளது.
சிங்கப்பூரர்களுக்கு உதவிட, யு-சேவ் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு $380 வரை அரசாங்கம் சலுகை வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கத்தோடு கரிம வரி தாக்கத்தை எதிர்கொள்ளவும் தண்ணீர் விலை ஏற்றத்தைச் சமாளிக்கவும் மக்களுக்கான சலுகைகள் இரண்டு மடங்காகின என்று அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

