வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் புதன்கிழமையன்று (மார்ச் 5) நடந்த ஏலக்குத்தகையில் பிரிவு ‘ஏ’ ஐத் தவிர மற்ற எல்லாப் பிரிவுகளிலும் அதிகரித்தது.
குறிப்பாக, பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த கார்கள், மின்சார கார்களுக்கான பிரிவு ‘பி’க்கான சிஓஇ கட்டணம் $113,000க்கு உயர்ந்தது.
பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த ஏலக்குத்தகையுடன் ஒப்பிடுகையில் பிரிவு ‘பி’க்கான சிஓஇ கட்டணம் 3.1 விழுக்காடு ஏற்றம் கண்டது. அம்மாதம் அது $109,598ஆக இருந்தது.
சிறிய, குறைந்த சக்திகொண்ட கார்களுக்கும் மின்சார கார்களுக்குமான ‘ஏ’ பிரிவில் கட்டணம் 0.1 விழுக்காடு குறைந்து $ 92,730 வெள்ளியாகப் பதிவானது. கடந்த ஏலக்குத்தகையில் அப்பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $ 92,850 ஆக இருந்தது.
பொதுப் பிரிவான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் $2,899 அதிகரித்து $112,901 ஆகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் கட்டணம் $65,189லிருந்து அதிகரித்து $67,001 வெள்ளியாகப் பதிவானது. கடந்த ஏலக்குத்தகையுடன் ஒப்புநோக்கும்போது இது 2.8 விழுக்காடு அதிகமாகும்.
மோட்டார் சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் சிஓஇ கட்டணம் 4.7விழுக்காடு அதிகரித்து $ 9,201 வெள்ளியாகப் பதிவானது.