மணமகன், மணமகள் பொருத்தம் பார்க்கும் நிறுவனங்கள் மீது புகார்கள் அதிகரிப்பு

2 mins read
66589ed0-e7d5-47ab-976f-91f0c29beb0b
லஞ்ச் ஆக்சுவலி மீதான புகார்கள் 2023ல் 24லிலிருந்து 2024ல் 36க்கு அதிகரித்தது என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறியுள்ளது. - கோப்புப் படம்: லஞ்ச் ஆக்சுவலி

பொருத்தமான மணமகன் அல்லது மணமகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் திருமணப் பொருத்தம் பார்க்கும் நிறுவனங்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.

நிறுவனங்கள் பணத்தைப் பெற்ற பிறகு மெதுவாகச் செயல்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தச் சேவைகளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலுத்திய பிறகும், சமயம், குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கான விருப்பம் போன்ற அடிப்படை அளவுகோலில் பொருத்தமான மணமகன் அல்லது மணமகளை முகவர்கள் அறிமுகப்படுத்துவதில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

திரு யாங் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், லஞ்ச் ஆக்சுவலி (Lunch Actually) என்ற திருமணப் பொருத்த சேவை நிறுவனத்துக்கு திரும்பப் பெற முடியாத சலுகைக் கட்டணமாக 324 வெள்ளி வைப்புத் தொகையை செலுத்தியதாகச் சொன்னார். அந்நிறுவனத்தின் உறுப்பினராக இல்லாத போதும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதை அந்தத் தொகுதி உள்ளடக்கியிருந்தது.

ஆனால் இலவச சந்திப்பு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 32 வயது யாங் சொன்னார்.

இது குறித்து கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதற்கும் அந்நிறுவனத்திடமிருந்து பதில் இல்லை.

இதையடுத்து சிறு கோரிக்கை நடுவர் மன்றங்களில் நிறுவனத்தின்மீது அவர் புகார் அளித்தார்.

இத்தகைய சம்பவங்கள் குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்தது.

அப்போது, லவ் குருப் என்ற சந்திப்பு தளத்தின்மீது 54 புகார்கள் வந்துள்ளதாக சங்கம் கூறியது.

லவ்ஸ்ட்ரக் ( Lovestruck) என்ற பெயரில் செயல்படும் அந்தத் தளத்தின்மீது 2021ல் 24, 2022ல் 29, 2023ல் 35 எனப் புகார்கள் அதிகரித்தன.

‘லஞ்ச் ஆக்சுவலி’யைப் பொருத்தவரை 2023ல் 24ஆக இருந்த அதன் மீதான புகார்கள் 2024ல் 36க்குக் கூடியது.

பெரும்பாலான வாடிக்கையாளர்களின் புகார்கள், குறிப்பிட்ட சேவைக்குக் கையெழுத்திட்ட பிறகு பொருத்தம் பார்க்கும் நிறுவனங்களிடமிருந்து பதில் வருவதில்லை என்பதையே மையமாகக் கொண்டிருந்தது என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.

குறிப்பிட்ட விருப்பங்களின் அடிப்படையில் பொருத்தமான நபர்களை அறிமுகப்படுத்துவதில்லை என்று சிலர் மேற்கோள் காட்டியுள்ளனர்.

கருத்தரங்கு, மதிப்பீடு தளங்களில் இடம்பெறும் இத்தகைய புகார்கள், பாரம்பரிய திருமணப் பொருத்தத்தை நம்பியவர்களுக்கு நல்ல சேவை கிடைக்கிறதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில் பம்பிள் (Bumble) , காஃபி மீட்ஸ் பேகல் (Coffee Meets Bagel) உள்ளிட்ட தளங்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்துள்ளன. இதனால் அதிகமான மக்கள் இத்தகைய சேவைகள் வழியாக தங்களுக்குப் பொருத்தமானவர்களை சந்திக்கின்றனர்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக மேம்பாட்டு கட்டமைப்பு , தேசிய அளவில் பெயர் பெற்ற திருமணப் பொருத்தப் பார்க்கும் நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தது. அத்தகைய சேவைகளை அங்கீகரிப்பதையும் அமைச்சு நிறுத்திக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்