மூப்படையும் மக்கள்தொகைக்கான செலவு அதிகரிப்பு; எச்சரிக்கை தேவை என வலியுறுத்தல்

2 mins read
9bb06a9e-d4b3-47a9-981d-ef5ea9feb609
மூத்தோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் துடிப்புடன் மூப்படைதல் எஸ்ஜி திட்டத்துக்காக ஏறத்தாழ $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூப்படையும் மக்கள்தொகையை ஆதரிக்க சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கான செலவுகளை அதிகரித்து வருகிறது.

கூடுதல் செலவு குறித்து எச்சரிக்கை தேவை என்றும் மூப்படையும் மக்கள்தொகை திட்டங்கள் தொடர்பான வீண்செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் செலவினங்களை ஆராயும் இந்த எஸ்டிமேட்ஸ் குழு, துடிப்புடன் மூப்படைதல் எஸ்ஜி திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

மூத்தோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் துடிப்புடன் மூப்படைதல் எஸ்ஜி திட்டத்துக்காக ஏறத்தாழ $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

துடிப்புடன் மூப்படையும் எஸ்ஜி திட்டங்கள் வழி குறைந்த செலவில் உச்ச இலக்கை எட்டும் ஆற்றல் மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்ததைக் குழு சுட்டியது.

மறுஆய்வின் முடிவுகள் தயாரானதும் அவை பகிரப்பட வேண்டும் என்று குழு அழைப்பு விடுத்துள்ளது.

42 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை எட்டுப் பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு நவம்பர் 4ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்தது.

குழுவுக்கு வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆங் வெய் நெங் தலைமை தாங்கினார்.

குழுவில் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஆறு பேரும் பாட்டாளிக் கட்சியின் ஜேமஸ் லிம்மும் இடம்பெற்றனர்.

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இவர்கள் எட்டுப் பேரும் மூன்று கூட்டங்களை நடத்தி கலந்துரையாடினர்.

இக்கூட்டங்கள் ஏப்ரல், ஆகஸ்ட், அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற்றன.

2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 100,000 மூத்தோருக்கு இலேசான உடற்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவித்த குழு துடிப்புடன் மூப்படையும் திட்டம் மூலம் மூத்தோருக்குக் கூடுதல் உதவி வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

மூத்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் முக்கிய காரணங்களை எதிர்கொண்டு அவர்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ ஆதரவு வழங்கும்படி அரசாங்கத்திடம் அது வலியுறுத்தியது.

திருத்தம்: இந்தச் செய்தியில் முன்னர் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தவறு. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 என்றிருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்