தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீடுகளுக்கு மாறும் வீவக வீட்டு உரிமையாளர்கள் அதிகரிப்பு

2 mins read
eb6cc6a2-4380-4d08-abf4-06933511eeb8
2024ஆம் ஆண்டில் தனியார் வீடு வாங்கும் வீவக வீட்டு உரிமையாளர்களில் பலர் புறநகர்ப் பகுதிகளில் தனியார் வீடுகளை வாங்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் வீடுகளுக்கு மாறும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.

தனியார் வீட்டு விலை, வீட்டுக் கடன் விகிதம் ஆகியவற்றைவிட வீவக வீடுகளின் விலை மற்றும் வீட்டுக் கடன் விகிதம் விரைவாக ஏற்றம் கண்டது இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் வீட்டுக் கடன் விகிதம் குறைந்ததை அடுத்து, தனியார் வீடு வாங்கியோர் எண்ணிக்கை கூடியது.

எனவே, சொத்து மேம்பாட்டாளர்கள் இவ்வாண்டு மேலும் பல தனியார் வீடுகளை விற்பனைக்கு விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒட்டுமொத்த வீட்டுச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளுக்கு இது மிகவும் பொருந்தும்.

2024ஆம் ஆண்டில் தனியார் வீடு வாங்கும் வீவக வீட்டு உரிமையாளர்களில் பலர் புறநகர்ப் பகுதிகளில் தனியார் வீடுகளை வாங்கினர்.

இவ்வாண்டு புறநகர்ப் பகுதிகளில் 5,600க்கும் அதிகமான புதிய கூட்டுரிமை வீடுகளும் செக்செக்யூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளும் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆரஞ்சுடீ குழுமம் தெரிவித்தது.

இவ்வாண்டு மொத்தம் 12,973 புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் ஏறத்தாழ 43 விழுக்காட்டு வீடுகள் புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும்.

2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு விடப்பட்ட புதிய தனியார் வீடுகளைவிட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

புதிய, மறுவிற்பனை தனியார் வீடுகளை வாங்கும் வீவக வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்ததாக பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

அவர்களில் பலர் வீட்டின் பரப்பளவு, விலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மறுவிற்பனை தனியார் வீடுகளை வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் மொத்தம் 5,420 புதிய, மறுவிற்பனை அடுக்குமாடி தனியார் வீடுகளை வீவக வீட்டு முகவரி கொண்டவர்கள் வாங்கியதாக புரோப்நெக்ஸ் சொத்து நிறுவனம் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டைவிட இது 7.1 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்