வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு

2 mins read
71177943-b75a-4ba2-a8d9-a4e888c29f41
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீட்டு விலை அக்டோபர் மாதம் 0.1 விழுக்காடு ஏற்றம் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை அக்டோபர் மாதம் 0.3 விழுக்காடு அதிகரித்தது.

ஆனால், அதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை சரிந்தது.

இந்தத் தகவலை சொத்து இணையவாசல்களான எஸ்ஆர்எக்ஸ், 99.co நவம்பர் 6ஆம் தேதியன்று வெளியிட்டன.

முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீட்டு விலை அக்டோபர் மாதம் 0.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.

முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் வீட்டு விலை அக்டோபர் மாதம் 0.5 விழுக்காடு உயர்ந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 9.8 விழுக்காடு அதிகரித்தது.

எக்சகியூட்டிவ் வீடுகளின் விலை ஆக அதிகமாக 1.8 விழுக்காடு உயர்ந்தது.

அதையடுத்து, மூவறை வீடுகள், ஐந்தறை வீடுகள் ஆகியவற்றின் விலை முறையே 0.4 விழுக்காடு, 0.2 விழுக்காடு உயர்ந்தது.

நாலறை வீடுகளின் விலை 0.2 விழுக்காடு குறைந்தது.

எக்சகியூட்டிவ் வீடுகள் போன்ற பெரிய வீடுகளின் விலை உயர்ந்ததால் அக்டோபர் மாதத்தில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரித்ததாக எஸ்ஆர்ஐ சொத்து முகவையின் ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

“எக்சகியூட்டிவ் வீடுகள் போன்ற பெரிய வீடுகளின் மறுவிற்பனை விலை அக்டோபர் மாதம் 3.3 விழுக்காடு அதிகரித்தது. அவற்றின் சராசரி விலை செப்டம்பர் மாதத்தில் $881,356ஆக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் $910,201ஆக உயர்ந்தது. இத்தகைய வீடுகள் ஓர் அளவுக்கு மட்டுமே உள்ளன. ஆனால், அவற்றுக்கான தேவை நிலையாக உள்ளதை விலை ஏற்றம் பிரதிபலிக்கிறது. வீடு வாங்குவோர் பெரிய வீடுகளுக்குக் கூடுதல் பணம் செலுத்த தயாராக இருப்பதை இது காட்டுகிறது,”என்று திரு சந்திரசேகரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்