அரசாங்கம் வழங்கும் சட்ட உதவிகளைப் பெறுவதற்குத் தகுதிபெறும் குடும்ப உறுப்பினர்க்கான தனிநபர் குடும்ப வருமானம் 1,650 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுவோர், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளோர்க்கு அரசாங்கம் பிரதிவாதி அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் மூலம் சட்ட உதவிகளை வழங்குகிறது. அதற்குத் தகுதிபெறுவதற்கான தனிநபர் குடும்ப வருமான வரம்பு 1,050 வெள்ளியாக இருந்தது.
திங்கட்கிழமை (மார்ச் 2) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய சட்ட அமைச்சர் எட்வின் டோங், “சமூகத்தின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடுகட்ட சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நெறிமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன,” என்று கூறியதுடன் உரிமையியல் சட்ட உதவித் திட்டத்தை விரிவாக்கும் சில மாற்றங்களையும் அறிவித்தார்.
இதன்மூலம், உரிய வழக்குகளில் சட்ட ஆலோசனையின்மூலம் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சொன்னார்.
தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, “இத்திட்டம் கிட்டத்தட்ட 1000 அல்லது அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்குப் பயனளிக்கும்,” என்றார்.
உரிமையியல், குற்றவியல் தொடர்பான சட்ட உதவிகள் சரியானவர்களுக்குப் போய்ச்சேர்வதை உறுதிசெய்ய வங்கிச் சேமிப்பு, மத்திய சேம நிதி அல்லாத முதலீடுகளுக்கான வரம்பு 10,000 வெள்ளியிலிருந்து $12,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் செயல்முறைகள் சிக்கலாகவும் செலவுமிக்கதாகவும் இருப்பதால், வழக்குகளில் வென்றவர்களுக்கான நிலுவைத்தொகைகள் மறுக்கப்படுவதைத் தடுக்கவும், அமலாக்கச் செயல்முறைகளை எளிமையாக்கவும் வகைசெய்யும் மசோதா இவ்வாண்டின் பிறபகுதியில் அறிமுகம் காணவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

