சிங்கப்பூரில் நிறுவன மறுசீரமைப்பு, செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு மாற்றுதல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவு போன்ற காரணங்களால் வேலைகளை இழக்கும் அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உதவியை நாடும் ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் பிரிவைச் சார்ந்த 3,900க்கும் மேற்பட்ட பணிநீக்க சம்பவங்களை என்டியுசி கையாண்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 5 விழுக்காடு அதிகமாகும். சிங்கப்பூரில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2 விழுக்காடு எனக் குறைந்த அளவிலேயே நீடித்தபோதிலும், ஒட்டுமொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 6,440ஆக இருந்து, 2025ஆம் ஆண்டில் 14,490ஆகப் பேரளவில் அதிகரித்துள்ளது.
உற்பத்திச் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் நிபுணத்துவச் சேவைகள், நிதி, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ளதாக என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே அக்கறை தெரிவித்துள்ளார்.
தங்களது அனுபவம் மற்றும் திறமைகளைத் தாண்டி நிறுவனங்களின் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளால் உள்நாட்டு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் வேலைகளின் தன்மை அதிவேகமாக மாறுவதால் ஊழியர்கள் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதிலும், மேம்படுத்திக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் பிரிவினர் வேலைக்குத் தேவையான ஆற்றலையும் அனுபவங்களையும் கொண்டவராக இருக்கும்போதிலும் சில நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை மற்ற நாடுகளுக்கு இடம் மாற்றுவதாகவும் திரு டே கூறினார்.
58 தொழிற்சங்கங்களுக்கும் ஆறு வர்த்தகச் சங்கங்களுக்கும் என்டியுசி தலைமை தாங்குகிறது.
எந்தவொரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் என்டியுசி அமைப்பில் பொது உறுப்பினர்களாக இணைந்து தங்களது உரிமைகளைப் பெறலாம் என்று ஊழியர்கள் பலருக்குத் தெரியாதது கவலை அளிப்பதாகத் திரு டே தெரிவித்தார்
தொடர்புடைய செய்திகள்
18 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றியும் திடீரென ஒரு மாத அறிவிப்புடன் பணிநீக்கம் செய்யப்பட்ட ‘பெஞ்சமின்’ என்ற தகவல் தொழில்நுட்ப ஊழியருக்கும் வங்கித் தொழில்நுட்பத் துறையில் திடீர் பணிநீக்கத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 55 வயது ‘ரகு’ என்ற ஊழியருக்கும் என்டியுசியின் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் பிரிவு உரிய ஆலோசனைகளையும் பேச்சுவார்த்தை உதவிகளையும் வழங்கி சுமுகமான முறையில் தகுந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தந்துள்ளது.
சிங்கப்பூர் ஊழியர்கள் பலர் பணிநீக்கங்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்றும் மாற்று வாழ்க்கைத்தொழில் மற்றும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டின் தொழில்துறை உறவுகள் சட்டத் திருத்தத்தின்படி, ஊழியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்டியுசியின் பொறுப்பு எல்லைகள் காலப்போக்கில் விரிவடைந்துள்ளதால் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் பிரிவினர் தங்களது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

