தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடு வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் அதிகரிப்பு

2 mins read
29d70938-6acc-4546-8a0d-eb5f6d503132
நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 68.1 விழுக்காடு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 72.7ஆக ஏற்றம் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை வழங்கும் சிங்கப்பூர் நிறுவனங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 68.1 விழுக்காடு அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 72.7ஆக ஏற்றம் கண்டது.

இந்தத் தகவலை மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடிநிலை முடிந்து ஆண்டுகள் சில ஆகிவிட்ட நிலையிலும் பல நிறுவனங்கள் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை அவற்றின் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

இந்நிலையில், வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று திருவாட்டி கான் கூறினார்.

பணியிடைக்கால ஊழியர்களுக்குப் புதிய திறன்களைக் கற்பித்தல், நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடு வழங்கப்பட்ட ஊழியர்கள் ஆகியோருக்கு இது ஆதரவு வழங்கும் என்றார் அவர்.

சொந்த வாழ்க்கையை நிர்வகிக்கும் அதே சமயம் வாழ்க்கைத் தொழில் பாதையில் மேம்பட பெண்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் உதவ மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும்.

வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டங்கள் தற்போது முதலாளிகளுக்கு சம்பள ஆதரவை வழங்குகிறது.

பணியிடைக்கால ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யும்போதும், ஏற்கேனவே இருக்கும் ஊழியர்களை நிறுவனத்தின் மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் பணிகளில் அமர்த்தும்போதும் இந்த உதவி அவர்களுக்கு கிடைக்கிறது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் முதலாளிகள் சிங்கப்பூர் ஊழியரணி இணையப்பக்கத்துக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி முழுநேர வேலைகளுக்கு மட்டும் இத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஏப்ரல் 1லிருந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் பணியிடை ஊழியர்களுக்கும் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களுக்கும் அது பயன்படுத்தப்படும்.

திட்டத்துக்குத் தகுதி பெற, நிறுவனங்களின் மேம்பாட்டுப் பங்களிக்கும் பணிகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு புதிய திறன்களைக் கற்றிருக்க வேண்டும்.

அத்துடன் அவர்கள் நிரந்தர ஊழியர்களாகவோ அல்லது குறைந்தது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராகவோ இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்