பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
லிட்டில் இந்தியாவுக்குச் செல்வது குறைந்தது
50b7ef14-09d3-4fce-8520-3b5702ce93f3
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நண்பர்களைச் சந்தித்துப் பேசும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

வெளிநாட்டு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒன்பது பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்லும் வருகையாளர் எண்ணிக்கை 2020க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகரித்தது.

ஆண்டு அடிப்படையில் சராசரி மாதாந்தர வருகையாளர் எண்ணிக்கை ஏற்றம் கண்டதாக மனிதவள அமைச்சு கூறியது.

2024ல் ஒவ்வொரு பொழுதுபோக்கு நிலையத்துக்கும் மாதந்தோறும் சராசரியாக 80,000 வெளிநாட்டு ஊழியர்கள் சென்றதாக மனிதவள அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், 15 வெளிநாட்டு ஊழியர்களிடம் பேசியது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் தற்போது அந்தப் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு அடிக்கடி செல்வதாக அவர்களில் 10 பேர் கூறினர்.

அவர்களில் ஒருவர் இந்திய ஊழியரான 43 வயது திரு செல்வன் காசி.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு தமது விடுப்பு நாளான ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் லிட்டில் இந்தியா சென்றதாக அவர் கூறினார்.

அங்கு தமது நண்பர்களைச் சந்தித்து, குடும்பத்துக்குப் பணம் அனுப்பி, தேவையான பொருள்களை வாங்கியதாகத் தெரிவித்தார்.

ஆனால் உட்லண்ட்ஸ் பொழுதுபோக்கு நிலையத்துக்கு அருகில் உள்ள தங்குவிடுதிக்கு அவர் 2012ல் இடமாறிய பிறகு, லிட்டில் இந்தியாவுக்குச் செல்வது குறைந்துவிட்டதாக திரு காசி கூறினார்.

தமது தங்குவிடுதியிலிருந்து அந்தப் பொழுதுப்போக்கு நிலையத்துக்கு வெறும் பத்து நிமிடங்களில் நடந்து சென்றுவிடலாம் என்றார் அவர்.

தற்போது ஓய்வுநாள்களின்போது உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள அந்த நிலையத்துக்குத் திரு காசி செல்கிறார்.

லிட்டில் இந்தியாவில் இருப்பதுபோலவே அந்த நிலையத்தில் மளிகைக் கடைகள், உணவுக் கடைகள், கைப்பேசி கடைகள், பணம் அனுப்பும் வசதிகள் போன்றவை இருக்கின்றன.

அதுமட்டுமல்லாது, விளையாட்டு மைதானங்களும் உள்ளன.

இந்த பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பிருந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்று மனிதவள அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நிலையங்களுக்குச் செல்ல வெளிநாட்டு ஊழியர்களை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமைப்புகள், வர்த்தகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த வெளிநாட்டு நிலையங்களில் கூடுதல் நடவடிக்கைகள், சேவைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொழுதுப்போக்கு நிலையங்களை நடத்த வெளி நிறுவனங்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக 2020 ஜூன் மாதம் மனிதவள அமைச்சு அறிவித்தது.

அத்துடன் பழைய பொழுதுபோக்கு நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவை புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), மனிதவள அமைச்சு ஆகியவை தலா மூன்று பொழுதுபோக்கு நிலையங்களை நடத்தி வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் மையம், பூன் லே பகுதியில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தை நடத்தி வருகிறது.

எஞ்சியுள்ள இரண்டு பொழுதுபோக்கு நிலையங்கள் உட்லண்ட்சிலும் காக்கி புக்கிட்டிலும் உள்ளன.

அவற்றைத் தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்