சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கட்டடங்கள், சன்னல்கள் போன்றவற்றில் மோதி ஏறக்குறைய 650 பறவைகள் மாண்டதாகப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
இறந்த பறவைகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான அவசரத் தொலைபேசி எண்ணைச் செயல்படுத்தும் லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகம் அந்த தகவல்களைத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு கண்ணாடிகளிலும் சன்னல்களிலும் மோதி இறந்த பறவைகள் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க ஐந்து மடங்கு அதிகரித்தது.
இறந்த பறவைகள் குறித்த விவரங்களை எங்குத் தெரிவிப்பது என்பதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் அதிகமானோர் தகவல் அளிப்பதாக அரும்பொருளகம் சொன்னது.
கட்டடங்கள்மீது நேரடியாக மோதும் பறவைகள் மூர்ச்சையடைவதுடன் காயமடைகின்றன. ஒரு சில பறவைகளின் நாசியிலிருந்து ரத்தம் கசிவதால் அத்தகைய விபத்துகளில் அவை இறந்துவிடுகின்றன.
“சன்னல்கள் பெரும்பாலும் தெளிவாக இருக்கின்றன. அவற்றைப் பறவைகளால் எளிதாகப் பார்க்க முடியாது. சன்னல்களுக்குள் அவை நேரடியாகப் பறக்கும்போது அவற்றில் மோதி கீழே விழுகின்றன,” என்றார் அவசரத் தொலைபேசி எண்ணை இயக்கிவரும் லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தின் மூத்த துணைக் காப்பாளர் டான் யென் யீ.
பறவைகள் எந்தத் திசையிலிருந்து கட்டடங்களிலும் சன்னல்களிலும் மோதுகின்றன என்பதைக் கண்டறிவதற்கான தகவல்களையும் அரும்பொருளகம் பெறுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சிங்கப்பூருக்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து பல பறவைகள் வந்தன. அத்தகைய மாதங்களில் புலம்பெயர் பறவைகள் கட்டடங்களில் மோதி இறக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் முதல் மாதத்தில் மட்டும் பெரெகிரின் ஃபெல்கன் என்ற கழுகு வகை பறவை பற்றிய தகவல் அவசர தொலைபேசி எண் மூலம் வழங்கப்பட்டது.
பறவைகளின் மரணத்தைத் தவிர்க்க வீட்டு சன்னல்களின் திரைச்சீலைகளை இழுத்துவிடும்படி ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாலை வேளையில் அது உதவும்.
இரவு நேரங்களில் பறக்கும் ஆந்தை போன்ற பறவைகள் கார்களில் அடிபடுவதாகவும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தவறுதலாகப் பறந்து காயப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

