ஈடாக எதுவும் தராமல் பெறப்படும் கடன்களில் சிக்கி உதவி நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடன்பற்று அட்டையில் (Credit Card) செலவழித்த தொகை, தனிநபர் கடன் போன்றவற்றைத் திருப்பிச் செலுத்த இயலாமல் தவிப்போர் அவர்கள்.
இவ்வாண்டின் ஜூன் 30 வரையிலான ஆறு மாதங்களில் சிங்கப்பூர் கடன்பற்று ஆலோசனை (CCS) அமைப்பின் உதவிநாடி 1,146 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
இது, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களைக் காட்டிலும் 18 விழுக்காடு அதிகம். அப்போது அந்தக் காலப்பகுதியில் 973 விண்ணப்பங்களை மட்டுமே அந்த அமைப்பு பெற்றது.
நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களை ஆதரிக்கும் தனது சேவைகளை நீட்டிக்கும் வகையில், புதியதொரு திட்டத்தை அந்த அமைப்பு தொடங்கிய வேளையில் இந்த விவரம் தெரியவந்தது.
‘நிதித் திறனை உருவாக்குவதற்கான ஆதரவு’ என்னும் பெயரிலான அந்தத் திட்டம் சமூக சேவை அமைப்புகள் பரிந்துரைக்கும் குடும்பங்களுக்கு உதவிபுரியும்.
தற்போது அந்தக் குடும்பங்களுக்கு இருக்கும் கடன்களைச் சமாளிக்க உதவும் அதேநேரம் நிதி தொடர்பான திறன் வளர்ப்புப் பயிற்சிகளையும் திட்டம் வழங்கும்.
கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர் மக்கள் அதிகம் செலவழித்ததும் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்ததும், கடனில் சிக்கி உதவிநாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் சில என்று சிங்கப்பூர் கடன்பற்று ஆலோசனை அமைப்பு தெரிவித்து உள்ளது.

