மனநலத் தாதிமை இல்லங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சமூகப் பராமரிப்பில் கூடுதல் கவனம்

மனநலத் தாதிமை இல்லங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சமூகப் பராமரிப்பில் கூடுதல் கவனம்

படம்: வான்கார்ட் ஹெல்த்கேர்

01 Jun 2026 - 5:46 pm

2 mins read

சிங்கப்பூரில் நீண்டகால மனநலச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய மனநலத் தாதிமை இல்லங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த விரிவாக்கத்துடன் இல்லங்களில் தங்கியிருப்போருக்குக் கூடுதல் தெரிவுகளையும் செயல்பாடுகளையும் வழங்கி, அவர்களின் நல்வாழ்வை மீட்டெடுக்கவும் தன்மதிப்பைப் பேணவும் அவர்கள் மீதான சமூகப் பார்வையை மாற்றவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மனநல நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற சிங்கப்பூரில் தற்போது பத்துத் தாதிமை இல்லங்கள் உள்ளன. நாட்பட்ட, மிகக் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவை நீண்டகாலப் பராமரிப்பை வழங்குகின்றன.

முன்னாள் பிரைட் விஷன் சமூக மருத்துவமனையாக இருந்த வளாகம், தற்போது ‘வான்கார்ட் கேர் ஹோம் (ஹவ்காங்)’ எனும் மனநலத் தாதிமை இல்லமாக மாற்றப்பட்டு, கடந்த மே 4ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

நிலையான மனநலக் குறைபாடுகளுடைய முதியோருக்கான 257 படுக்கைகளைக் கொண்ட இந்த இல்லத்தை வான்கார்ட் ஹெல்த்கேர் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதன் அருகிலேயே ஜூலை 6ஆம் தேதி முதல் ‘வான்கார்ட் கேம்பஸ் ஹோம்’ எனும் 48 படுக்கைகள் கொண்ட மறுவாழ்வு இல்லம் திறக்கப்படவுள்ளது.

21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் குணமடைந்து மீண்டும் சமூகத்துடன் இணைய இது உதவிகரமாக இருக்கும். மேலும், 2029ஆம் ஆண்டில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனை மற்றொரு புதிய மனநலத் தாதிமை இல்லத்தைத் திறக்கவுள்ளது.

புவாங்கோக் கிரீன் மெடிக்கல் பார்க்கில் அமையவிருக்கும் இந்த 377 படுக்கை வசதிகள் கொண்ட இல்லத்தில் ஊழியர்களும் குடியிருப்பாளர்களும் இணைந்து நடத்தும் சமூகக் காப்பிக் கடை, மளிகைக் கடை, முடி திருத்தும் கடை போன்ற வசதிகள் இடம்பெறவுள்ளன.

இவை அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர் பகுதிநேர வேலைகளில் ஈடுபடவும் பொதுமக்களுடன் அவர்கள் சுமுகமாகத் தொடர்புகொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும். சிங்கப்பூரில் தற்போது 10 மனநலக் காப்பகங்கள் உள்ளன.

நாட்டின் மனநலத் தாதிமை இல்லங்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை வரும் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,800 ஆக உயரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வேகமாக மூப்படையும் மக்கள்தொகையில், வளர்ந்துவரும் மனநலக் குறைபாடுகளுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய, 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய மனநலச் செயல்திட்டத்தின்கீழ் இந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்